‘நீர்வழிப் படூஉம்’ நாவல் யாரின் வாழ்வைப் பேசுகிறது..?
எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டையில் பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்டவர் எழுத்தாளர் தேவிபாரதி. இவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘பலி’. அருந்ததியர் சமூகத்தின் வலிகளைப் பதிவு செய்திருந்தது.
தேவிபாரதியின் பல்வேறு சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘நிழலின் தனிமை’, ‘நீர்வர் ழிப் படூஉம்’, ‘நொய்யல்’, ‘அற்ற குளத்து அற்புத மீன்கள்’ ஆகிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். ‘பிறகொரு இரவு’ போன்ற சிறுகதைகள் மற்றும் ‘நொய்யல்’ நாவல் மூலம் இலக்கிய வட்டத்தில் பரவலாக பேசப்பட்டவர் தேவி பாரதி. இவரது படைப்புகள், மானுட உணர்வையும் எளிய மக்களின் வாழ்வியலையும் வெளிப்படுத்துபவை எனப் பெயர் பெற்றவை.
அந்த வகையில், ‘நீர்வர் ழிப் படூஉம்’ நாவலுக்காக தேவிபாரதிக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாவல் யாரின் வாழ்வை பேசுகிறது..?
குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவைச் சித்தரிக்கிறது இந்நாவல். தமிழின் சிறந்த நாவல் வரிசையில் நிலைகொள்ளும் வகையிலான இந்நாவலில் மனிதர்கள், அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில், தங்களுக்கான ஆசுவாசத்தை நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் அவர்கள் தேடிக்கொள்கிறார்கள்.
கொங்கு வட்டாரத்தின் இந்த எளிய மக்களின் வாழ்க்கைப் பாட்டை தேவி பாரதி எப்படி யதார்த்தத்துக்கு அருகில் நின்று படைத்துள்ளார் என்பதையும், கோவை வட்டார வழக்கு எந்த அளவுக்கு இந்த நாவலில் விஸ்தாரமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் எழுத்தாளர் கிருஷ்ணன் சங்கரன் மிகவும் சிலாகித்து எழுதிய பதிவு இது…
“இன்றைக்கு பத்துக்குப் பத்து அடைப்புகளுக்குள் ‘பார்பர்’ ‘அம்பட்டன்’ போன்ற பெயர்களில் புழங்கும் நாவிதர் சமூகம்தான் நமக்குத் தெரியும். ஆனால் அன்று சமூகத்தில் ஓர் இடத்துடன் இருந்திருக்கிறார்கள். அன்றைக்கு குடிநாவிதர்கள் இல்லாமல் கல்யாணமோ, கருமாதியோ, பூப்புனித நீராட்டுவிழாவோ, வளைகாப்போ எந்த ஒரு காரியமும் நடந்துவிட முடியாது. எந்தெந்த விசேஷங்களுக்கு யார்யாரை, எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்களும் அவர்களே. இவ்வாறு பண்ணையக்காரர்களின், பண்ணையக்காரச்சிகளின் சமூக அடுக்குகளிடையே முக்கியமான கண்ணியாக இருந்திருக்கிறார்கள் குடிநாவிதர்கள்.
‘∴பேமிலி டாக்டர்’களின் ஆதிவடிவங்கள்
அவர்களுக்கு ‘மருத்துவர்’ என்றொரு பெயருமுண்டு. இன்றைக்கு இருக்கும் ‘∴பேமிலி டாக்டர்’ என்று சொல்லப்படுபவர்களின் ஆதிவடிவங்கள். வீட்டில் யார் யாருக்கு என்னென்ன நோக்காடு, அதற்கான மருத்துவ முறைகள். கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ நூலில் புதிதாகக் குடியேறிய கொங்கு வேளாளர்களுக்கு அந்த ஊர் நாவிதர்கள் வேலைசெய்ய மறுத்துவிட, தங்கள் சாதியிலிருந்தே குடிநாவிதர்களை உருவாக்கிக் கொண்டதை எழுதியிருப்பார்.
தங்கைகளுக்காக உயிர் கொடுக்கும் அண்ணனாய் இருந்து மணம் முடித்து, குழந்தைகளைப் பெற்று, பெண்டாட்டி பிள்ளைகள் உட்பட எல்லோரையும் தொலைத்துத் தேடி அலைந்து, நொந்து வலிப்பு நோயால் அவதியுற்று மரிக்கும் கதைசொல்லியின் காருமாமா. லிங்கநாவிதன் என்ற அந்த சமூகத்துப் பாணனின் இழவுப்பாட்டுக்களை தங்கச்சி பாட, ஊர்கூடிச் சிறப்பாக, காருமாமாவின் காடேத்தம் நடந்து முடிவதில்தான் கதையே தொடங்குகிறது. திருப்பூருக்கருகில் உள்ள உடையாம்பாளையத்தில் உள்ள குடிநாவிதரான ஆறுமுகம் என்கிற காருமாமாவின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைசொல்லியின் பார்வையில் நினைவுகூறலாக விரிகிறது. அவருடைய பிரிந்துபோன குடும்பம் அவருடைய இறப்பின்மூலமே ஒன்று சேர்கிறது.
‘வாழ்க்கையின் பலமுகங்களைச் சித்தரிக்கும் ஆழமான பதிவு’
கதைசொல்லிக்கும் அவர் அத்தை மகளுக்குமான காதல் அந்த இழவுச்சடங்குக்கு நடுவேயே இயல்பாக மலர்கிறது. பெரியவர்களெல்லாம் ஜெமினி கணேசன், சாவித்திரி என்று கிண்டலடிக்கிறார்கள். காருமாமாவின் தங்கைப் பாசமும் பாசமலர் சிவாஜி – சாவித்திரி என்றே கிண்டலடிக்கப்படுகிறது. எழுபது எண்பதுகளின் வாழ்வியலில் பிரிக்கமுடியாத ஆதிக்கம் செலுத்திய வானொலி, சினிமாவின் தாக்கங்கள்- குழந்தைகளை வேலைசெய்யும் இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்கள் கண்முன்னேயே பண்ணையக்காரச்சியின் அவமதிப்புக்குள்ளாகும் பெரியம்மா -சாயப்பட்டறையில் என்றைக்கோ செய்துகொள்ளப்போகும் தற்கொலைக்காக ஒளித்துவைக்கப்படும் சாயப்பொடிகள், அரசுவேலை அடித்தளச் சமூகத்தில் ஏற்படுத்திய மறுமலர்ச்சி என்று வாழ்க்கையின் பலமுகங்களைச் சித்தரிக்கும் ஆழமான பதிவு.
நாவலில் ‘தாயரக்கட்டம்’ முக்கியமான படிமமாக உள்ளது. கதாபாத்திரங்களே சுழட்டிப்போட்ட தாயக்கட்டைகள்தான் என்கிற நிலையில், இழவு வீட்டில் அவர்கள் கட்சி கட்டிக்கொண்டு ஆடுகிற ‘தாயரக்கட்டம்’ ஒரு முக்கியமான நிகழ்ச்சியை முடித்துவைக்கக் காத்திருக்கிறது. நான் படித்த நாவல்களில் மிகவும் பரபரப்பான கட்டத்தில் முடிந்த சமூக நாவல் இதுதான்.அதேபோல் கோவை வட்டார வழக்கு இவ்வளவு விஸ்தாரமாக ஆவணப்படுத்தப் பட்டிருப்பது இந்த நாவலில்தான். அந்த வட்டார வழக்கு அறிமுகமாகாத பொதுவாசகனுக்கு அதுவே பெரியதடையும் கூட!”