Amazing Tamilnadu – Tamil News Updates

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்தும் இளைஞரணி மாநாடு: மு.க.ஸ்டாலின்

திமுக இளைஞரணி மாநாடு, 2024 தேர்தலுக்கு தொண்டர்களை ஆயத்தப்படுத்தும் மாநாடு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்” என்று கூறியுள்ளார்.

“மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பது திமுக-வின் முக்கியமான முழக்கம். பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால் தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும்” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

“ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது” என்பதை உணர்த்த சேலத்தில் இளைஞரணியின் மாநாடு நடைபெறவிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Exit mobile version