Amazing Tamilnadu – Tamil News Updates

செமிகண்டக்டர் நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்க்க காரணம் என்ன?

செமிகண்டக்டர்’ எனப்படும் குறை கடத்திகள் உற்பத்தியைத் தமிழ்நாட்டில் அதிகரிப்பதற்கான கொள்கை ஒன்றை தமிழ்நாடு அரசு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிட்டது.

கார்களில் ஆரம்பித்து ராணுவம் வரையில் செமிகண்டக்டர் எனப்படும் மைக்ரோ சிப்கள் பயன்படாத இடமே இல்லை. செமிகண்டக்டர்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள், பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கும்.

தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிப்பதற்கென உலக முதலீட்டாளர் மாநாட்டில், கொள்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி, செமி கண்டக்டர் உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு மூலதன மானியம், சிறப்புப் பயிற்சிக்கு சலுகைகள், குறைந்த விலையில் நிலம் அளிப்பது போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகைகளைப் பெற, எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், குறைந்தபட்சம் ரூ. 200 கோடி முதலீடு செய்ய வேண்டும். 150 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். அடுத்து கூடுதலாக செய்யப்படும் ஒவ்வொரு 50 கோடி ரூபாய் முதலீட்டிற்கும் 35 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அளித்துள்ள இத்தகைய சலுகைகள், சர்வதேச அளவில் செமிகண்டக்டர் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களை ஈர்த்துள்ளன.

ஏற்கனவே, செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்த நிறுவனங்கள், தங்களின் தொழிலை விரிவாக்கம் செய்தாலும் மேற்கண்ட சலுகைகள் கிடைக்கும். அதேபோல், செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களையும் திறன் மேம்பாட்டு மையங்களையும் அமைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்திக்குத் தேவையான திறன் படைத்தவர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. சுமார் 100 கல்வி நிறுவனங்கள், எலெக்ட்ரானிக் மற்றும் நானோ தொழில்நுட்பக் கல்வியை அளித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், இது தொடர்பான டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் படிப்பை முடித்து, சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வெளியே வருகின்றனர். மாநிலம் முழுவதும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி தொடர்பாக 400க்கும் மேற்பட்ட ஐடிஐ கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த ஐடிஐ-களில் எலெக்ட்ரானிக் தொடர்பான ஏராளமான படிப்புகள் உள்ளன.

எனவே, செமிகண்டக்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள் உற்பத்திக்குத் தேவையான மனித வளம் தமிழ்நாட்டில் அபரிமிதாக இருக்கிறது. இவை அனைத்துமே செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கின்றன.

Exit mobile version