Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

காஞ்சிபுரத்தில் செல்போன் கண்ணாடி தொழிற்சாலை: ரூ.1000 கோடி முதலீடு; 840 பேருக்கு வேலை!

ந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் இம்மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் 1003 கோடி ரூபாய் முதலீட்டில், மின்னணு சாதனங்களுக்காக கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தமிழ்நாட்டில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம், கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன். இந்த நிறுவனம், ஆப்பிள், அமேசான் போன்ற ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் “கார்னிங் கொரில்லா” எனப்படும் வலுவூட்டப்பட்ட கண்ணாடி உற்பத்தி செய்யும் நிறுவனம் இது.

இந்த நிறுவனம் மற்றும் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் (Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிட்டட் (Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH) ஆகும்.

இந்த நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் உள்ள சிப்காட்டில், 1003 கோடி முதலீட்டில் செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க உள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் 840 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

Exit mobile version