Amazing Tamilnadu – Tamil News Updates

இளைஞரணி மாநாடு: உதயநிதியை துணை முதல்வராக்கவா?

சேலம், பெத்த நாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு வருகிற 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

9 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல், 2 லட்சம் பேருக்கு இருக்கை வசதி, 50 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி, 3 லட்சம் பேருக்கு சாப்பாடு என தடபுடலான ஏற்பாடுகளுடன் இளைஞரணி மாநாடு நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சி நடக்கும் மேடை மட்டுமே 100 மீட்டர் நீளம் என்கிறார்கள். மேடைக்கு முதலமைச்சர் வந்து சேர்வதற்கு தனியாக சிறப்பு வழி ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற பெயரில் பொதுமக்களிடம் வாங்கிய கையெழுத்துகளை முதலமைச்சரிடம் மேடையில் ஒப்படைக்கிறார்கள்.

மாநாடு துவங்குவதற்கு முன்பே, சென்னையில் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்து பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தச் சுடர், 310 கிலோ மீட்டர் தூரம் கடந்து சேலம் செல்ல இருக்கிறது. மாநாட்டில், இளைஞரணி பற்றிய வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சி இடம் பெறுகிறது. 11 புத்தகப் பதிப்பகங்களின் ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.

தெருக்குரல் அறிவு, குத்தூஸ், புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. மாநில உரிமை, திமுக வரலாறு, சாதனைகள் எனப் பல்வேறு அம்சங்களில் 22 தலைப்புகளில் 22 பேச்சாளர்கள் பேச இருக்கிறார்கள். அனைவரையும் அசர வைக்கும் விதத்தில் ஒரு பிரம்மாண்டமான ‘ட்ரோன் ஷோ’ ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.

மாநாட்டின் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த மாநாட்டின் அரசியல் முக்கியத்துவம் பற்றித்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

தேர்தல் நேரத்தில், பிரச்சாரத்திற்கு பல வடிவங்களைப் பயன்படுத்துவது திமுகவின் வழக்கம். அதில் ஒன்றுதான் மாநாடு நடத்துவது. அந்த மாநாட்டில் திமுக தனது கொள்கைகளைச் சொல்வதோடு, அதையே தனது பிரச்சாரமாகவும் ஆக்கி விடும்.

ஆனால் வழக்கமாக திமுகவே அந்த மாநாட்டை நடத்தும். ஆனால் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணி ஒரு மாநாட்டை நடத்துகிறது. ஏன் இப்படி? ‘இளைஞரணியை முன்னிறுத்த இல்லை… இளைஞரணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தத்தான்’ என்று சிலர் சொல்கிறார்கள். மாநாட்டிற்குப் பிறகு, அவரை துணை முதலமைச்சராக்கப் போகிறார் ஸ்டாலின் என்றும் பேச்சு அடிபட ஆரம்பித்தது.

இதைப் பற்றி உதயநிதியிடம் கேட்ட போது, “நான் மட்டுமா..? எல்லா அமைச்சர்களுமே முதலமைச்சருக்குத் துணையாகத்தான் பணி செய்கிறோம்” என்று தனக்கே உரிய பாணியில் பதில் சொன்னார். முதலமைச்சர் ஸ்டாலினும் அது வதந்தி என்று தெளிவுபடுத்தி இருந்தார். அதே சமயம், அடுத்து அவர் சொன்னதுதான் மிகவும் முக்கியமானது.

“இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை மீட்பு என்ற முழக்கத்தை திசை திருப்பத்தான் இப்படிப் பட்ட வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், “மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தை செயல்படுத்தத்தான் சேலம் இளைஞரணி மாநாடு. அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்றும் அவர் சொல்லி இருந்தார்.

அவர் சொன்னதை வைத்துப்பார்க்கும் போது, இந்த மாநாடு நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கானதுதான்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எதை முன்னிறுத்தப் போகிறது என்பதும் ஸ்டாலின் சொன்னதில் இருந்து தெளிவாகி விட்டது. மாநில உரிமைகளை ஒன்றிய அரசு எதிலெல்லாம் பறிக்கிறது என்பதைப் பற்றித்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பிரச்சாரம் செய்யப் போகிறது.

அதற்கான முதல் அடியை இந்த மாநாட்டில் எடுத்து வைக்கப் போகிறார்கள். இந்த மாநாட்டில் 22 பேச்சாளர்கள் 22 தலைப்புகளில் பேசுகிறார்கள்.

இந்தியாவிலேயே 22 தலைப்புகளில் பேசுவதற்கு விஷயம் இருக்கும் கட்சி திமுகதான். நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, நீட் விலக்கு நம் இலக்கு, மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி, மருத்துவக் கட்டமைப்பில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்வது, இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்று மாநில உரிமைகள் தொடர்பான பல தலைப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

மொத்தத்தில் இந்த மாநாட்டின் நோக்கம், மாநில உரிமைகளை ஒன்றிய அரசு எப்படி எல்லாம் பறிக்கிறது என்பதைச் சொல்லவும், அதையே தேர்தல் பிரச்சாரமாக்குவதும்தானேயொழிய, உதயநிதியை முன்னிறுத்த இல்லை.
திமுகவைப் பொறுத்தவரையில் அதன் தற்போதைய நோக்கம், ‘நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற வேண்டும்’ என்பதுதான் . அதற்கு, முதலில் ஒன்றிய அரசை எதிர்த்து ஆணித்தரமான வாதங்களை முன்வைக்க வேண்டும். அதற்கு தொண்டர்களைத் தயார் செய்யும் மாநாடு தான் இந்த மாநாடு!

Exit mobile version