கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் மாணவி யோக ஶ்ரீ. அங்குள்ள பால்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவரது தந்தை டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி.
இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே மாணவி யோக ஶ்ரீ யிடம் நன்றாக பாடும் திறமை இருப்பதைக் கண்டறிந்த அம்மாணவியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியை, தொடர்ந்து அவரை பாட்டுப்பாட ஊக்கப்படுத்தி வந்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த மாணவியும் தனது பாட்டுப்பாடும் திறனை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில், இத்தனை ஆண்டுகளாக ஆசிரியைத் தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியதன் பலனாக மாணவி யோக ஶ்ரீ, ஜீ தொலைக்காட்சியின்
‘சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் அவர் பி சுசீலா பாடலையும், ஆஷா போன்ஸ்லே பாடலையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் திகைக்க வைத்தார்.
அப்போது நடுவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸ், அந்த மாணவியிடம், “வேறு ஏதாவது பாட முடியுமா…?” எனக் கேட்க, உடனே அவர் இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘நேருக்கு நேர்’ படத்தில் இடம்பெற்ற “எங்கெங்கே…” பாடலைப் பாடுவதாக கூறுகிறார்.
அதைக் கேட்ட ஸ்ரீநிவாஸ், அது பாட சற்று கடினமான பாடல் என்பதால், “ஐயோ… அது பிரமாண்டமான பாடல் ஆச்சே…” என வியப்பு மேலிட பார்க்க, உடனே நடுவர் ஸ்வேதா மோகன், ” உங்க பாடல் தேர்வு different ஆக இருக்கு” எனப் பாராட்டி, அவரைப் பாடச் சொல்கிறார்.
அதனைத் தொடர்ந்து யோக ஶ்ரீ பாடத் தொடங்கவும், பாடிய முதல் இரண்டு வரிகளைக் கேட்ட உடனேயே ஸ்ரீநிவாஸின் முகம் வியப்பில் ஆழ்ந்தது. அடுத்ததாக ஸ்வேதா மோகனும் ஆச்சர்யம் மேலிட பார்க்க, தொடர்ந்து யோக ஶ்ரீ யின் குரல் வளமும், அந்த பாடலின் ஹம்மிங்கும் அரங்கத்தில் இருந்தவர்களை அரள வைத்தது.
“மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட அரசுப்பள்ளிகள்”
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக நெல்சன் சேவியர் என்ற பிரபல வலைப்பதிவர், தனது எக்ஸ் வலைதளத்தில், ” அவ்வளவு பெரிய மேடையை எத்துணை இலகுவாக முதிர்ச்சியாக கையாண்டார் யோக ஶ்ரீ.
அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு பள்ளிக் கல்விதுறை ஆண்டுதோறும் நடத்தும் கலைப் போட்டிகளில் கரூர் மாவட்டம் சார்பாக பங்கேற்று அங்கு வந்திருந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆச்சரியப்படைத்தி இருக்கிறார் யோக ஶ்ரீ.
பள்ளிக் கல்விதுறை மூன்றாண்டுகளாக விதைத்த விதைகள் சிறப்பான பலனை தரத் தொடங்கியிருக்கின்றன. மணவாடி அரசுப் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர். மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவைகள் அரசுப்பள்ளிகள்” எனப் பதிவிட்டிருந்தார். அத்துடன் இதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கும் டேக் செய்திருந்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு
இதனைக் கண்ட அமைச்சர் அன்பில் மகேஸ், “அரசுப் பள்ளி மாணவி யோக ஶ்ரீ மற்றும் ஆசிரியை மகேஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துகள்” எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மேலும் பலரும் மாணவி யோக ஶ்ரீயைப் பாராட்டி வருகின்றனர்.