Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

வக்ஃபு சட்டம்: “இதை ஏன் இன்னும் செய்யவில்லை?” – ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி!

க்ஃப் திருத்தச் சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு, அரசியலமைப்பு மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…

“பாஜக அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம், இஸ்லாமிய சகோதரர்களின் உரிமைகளை நேரடியாகப் பறிக்கிறது. இது அரசியலமைப்பு மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கு மறைமுக ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதை உணர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துகள் மீது இச்சட்டத்தின் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, மாவட்ட ஆட்சியர்கள் புதிய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. பின்னர் நடந்த விசாரணைகளிலும் இந்த உத்தரவு தொடர்கிறது. இது வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகளுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

நமது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அரசியலமைப்பின் அடிப்படை விதிகளையும், மத உரிமைகள் தொடர்பான நீதிமன்றங்களின் வரலாற்று நிலைப்பாடுகளையும் விளக்கி வாதாடினார். இச்சட்டம் அரசியலமைப்பு விதிகள் 14, 15, 19, 25, 26, 29 மற்றும் இஸ்லாமியர்களின் மத உரிமைகளை நேரடியாக மீறுவதாக அவர் எடுத்துரைத்தார். இந்த இடைக்கால உத்தரவில் தவெக முக்கிய பங்காற்றியது.

வழக்கின் தொடர்ச்சியாக, எதிர் மனுதாரரின் பதிலுரைக்கு தவெக சார்பில் பதிலுரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணை நாளை (மே 15) நடைபெறுகிறது. இதில், சிறுபான்மையினர் உரிமைகளுக்கு எதிரான இச்சட்டம், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளோம்.

‘திமுக அரசு இதை ஏன் இன்னும் செய்யவில்லை?’

வக்ஃப் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகிவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் நிலை என்ன? இதுகுறித்து அரசு ஏன் விளக்கவில்லை? இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க திமுக அரசு செயல்படுத்துவதாகக் கூறும் நடவடிக்கைகள் எப்போது தொடங்கும்?

சிஏஏ சட்டத்திற்கு எதிராக கேரள இடது முன்னணி அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதேபோல், தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் இணைந்து, தனியான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டாமா? இதை ஏன் இன்னும் செய்யவில்லை?

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், வெறும் அடையாளத்திற்காக அல்ல; அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைக் காக்கும் அறைகூவலாக இருக்க வேண்டும். சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்க, இச்சட்டம் ரத்து செய்யப்படும் வரை, தவெக உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மக்களுடன் இணைந்து போராடும்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக்கொள்ள வேண்டியது தார்மீகக் கடமையாகும்.சிறுபான்மையினர் உரிமைகளையும், அரசியலமைப்பையும் காக்க, தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் முதன்மைச் சக்தியாக நிற்கும்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version