மே 1 அன்று வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனமும், ரசிகர்களிடம் காணப்படும் வரவேற்பும், பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவிக்க செய்து வருகிறது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படத்துக்கு, சீன் ரோல்டனின் இசையும், அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மெருகூட்டுகின்றன.
கதைக்கு கிடைத்த வரவேற்பு
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் சென்னைக்கு வரும் தர்மதாஸ் (சசிகுமார்), வசந்தி (சிம்ரன்) குடும்பத்தின் போராட்டங்களை உணர்ச்சிகரமாக சித்தரிக்கும் இப்படம், மனிதநேயத்தையும் ஒற்றுமையையும் கொண்டாடுகிறது. விமர்சகர்கள், “சசிகுமார்-சிம்ரனின் நடிப்பு மனதை உருக்குகிறது,” எனப் பாராட்டினர். ஈழத் தமிழரான விநியோகஸ்தர் விதுர்ஸ், ” இப்படம் பல குடும்பங்களின் பயணத்தை பிரதிபலிக்கும் மாணிக்கம்” எனப் புகழ்ந்து இருந்தார்.
பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்
இந்த நிலையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பாக்ஸ் ஆஃபிஸில் 12 நாட்களில் ரூ. 34.63 கோடி நிகர வசூல் செய்து, 16 கோடி ரூபாய் பட்ஜெட்டை இரு மடங்காக மீட்டு, லாபத்தில் பயணிக்கிறது. உலகளவில் ரூ. 25.76 கோடி வசூலித்து, 2025 ஆம் ஆண்டில் எட்டாவது அதிக வசூல் செய்த தமிழ் படமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 20.65 கோடி வசூலித்து, இரண்டாவது வார இறுதியில் ரூ. 15.65 கோடி குவித்து, முதல் வார இறுதியை (ரூ. 10.65 கோடி) மிஞ்சியது மெகா வெற்றியாக பார்க்கப்படுகிறது பிரிட்டனில் சூப்பர் ஸ்க்ரீன் வடிவத்தில் வெளியானது, சிறிய பட்ஜெட் தமிழ் படத்திற்கு முதல் முறையாகும். மே 31 ல் இதன் ஓடிடி வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.
‘ரெட்ரோ’ உடன் கடும் போட்டி
‘டூரிஸ்ட் ஃபேமிலி’, சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துடன் (கார்த்திக் சுப்பராஜ் இயக்கம்) வெளியாகி, கடும் போட்டியை சந்தித்தது. ‘ரெட்ரோ’, 10 நாட்களில் உலகளவில் ரூ. 93 கோடி வசூலித்து, 100 கோடி கிளப்பை நெருங்கியது. ஆனால், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தமிழ்நாட்டில் வசூலில் முன்னிலை பெற்று, குடும்ப ரசிகர்களை கவர்ந்தது. Bookmyshow வில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ 97 ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்று, ‘ரெட்ரோ’வை மிஞ்சியது. ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் 10 ஆவது நாளில் அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்து, ‘ரெட்ரோ’வை பின்னுக்குத் தள்ளியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.