சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் 8 வரை அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், மதுபான கொள்முதல், பார் உரிமம் வழங்குதல் மற்றும் போக்குவரத்து டெண்டர்களில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
வழக்கின் பின்னணி
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. சென்னையில் 12 இடங்களில் சோதனைகள் நடந்தன. சோதனையின்போது, சொத்து பத்திரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்கள் குளோன் செய்யப்பட்டன. இந்தச் சோதனைகள் சட்டவிரோதமானவை என்றும், மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்டவை என்றும் கூறி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு முதலில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, எந்தவொரு மேற்படி நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த அமர்வு விலகியதை அடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை தொடர்ந்தது.
ஏப்ரல் 15 அன்று நடந்த விசாரணையின் போது தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை (FIR) தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மாநில அரசின் அனுமதியின்றி சோதனை நடத்தப்பட்டது சட்டவிரோதம் என்றும் தமிழக அரசு வாதிட்டது.

இதையடுத்து ஏப்ரல் 23 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பெண் அதிகாரிகளை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத்துறையின் விசாரணையை தடுக்க முயல்வதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
இந்த நிலையில் இன்று (மே 22 ) , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறை கூட்டாட்சி தத்துவத்தை மீறி, வரம்பு மீறி செயல்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். முறைகேடு நடந்திருந்தால், தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என்றும், ஒட்டுமொத்த டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றும் நீதிமன்றம் கூறியது.
நீதிபதிகள் எழுப்பிய கேள்வி : “நிதி முறைகேடு எங்கு நடைபெற்றது என அமலாக்கத்துறை தெளிவாக கூற முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்களை குளோன் செய்தது ஏன்? இந்த விசாரணைகள் சட்டவிரோதமானவை என்று கூறி, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, கோடை விடுமுறைக்குப் பின்னர் இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தது.
அமலாக்கத்துறை மீது திமுக காட்டம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது. தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை குறிவைத்து, எந்த ஆதாரமும் இல்லாமல் சோதனைகள் நடத்தப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மாநில உரிமைகளை பாதுகாக்கும் ஒரு மைல்கல் தீர்ப்பாகும்.
அமலாக்கத்துறையின் இந்த அத்துமீறல்கள், திமுக அரசை அவதூறு செய்யும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. இதை தடுக்கவே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன ” என்று விமர்சித்தார்.
அமலாக்கத்துறை மீதான முந்தைய சர்ச்சைகள்
இந்த வழக்கு, தமிழகத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிரான மற்றொரு முக்கியமான சட்டப் போராட்டமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியபோது, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை மாற்றி, ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
டாஸ்மாக் விவகாரத்தில், அமலாக்கத்துறை மாநில அரசின் அனுமதியின்றி சோதனை நடத்தியது சட்டவிரோதம் என்று தமிழக அரசு வாதிட்டது. 2023 ஜூன் மாதம், மத்திய விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டதால், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் மாநில உரிமைகளை மீறுவதாக உள்ளன என்று கூறப்பட்டது.
தமிழக அரசு, இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும், டாஸ்மாக் அதிகாரிகள், குறிப்பாக பெண் அதிகாரிகள், சோதனையின்போது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக பிரமாண மனு தாக்கல் செய்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை மறுத்து, சோதனைகள் சட்டப்படி நடத்தப்பட்டதாகவும், எந்த அதிகாரியும் துன்புறுத்தப்படவில்லை என்றும் வாதிட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை உத்தரவு, தமிழக அரசுக்கு முக்கியமான வெற்றியாகவும் அமலாக்கத்துறைக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.