தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மே 19 முதல் 24 வரை கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
கோயம்புத்தூரில் ஆழியாறு பகுதியில் மே 22 அன்று 15 செ.மீ மழை பெய்தது, திருப்பூரில் திருமூர்த்தி அணை (14 செ.மீ) மற்றும் அமராவதி அணை (12 செ.மீ) ஆகியவை குறிப்பிடத்தக்க மழையைப் பெற்றன. நீலகிரியில் பந்தலூர் பகுதி 78 மி.மீ மழையைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை ( Red Alert) விடுத்துள்ளது. மேற்கு மத்திய மற்றும் அருகிலுள்ள வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகுவதற்கு ஏற்ற நிலை உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மே 23 முதல் 27 வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைகள் நடத்தியுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு

இந்த நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளர். தீயணைப்பு துறை, மின்சாரம்,நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இதனிடையே கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை 8 நாட்களுக்கு முன்கூட்டியே, இன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், கேரளாவில் இன்று பரவலாக மணிக்கு 40 கிமீ வேக காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, திரிச்சூர், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.