தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று இணையும் நிகழ்வு காரணமாக, இன்று திங்கட்கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி தமிழகத்தை நெருங்கியுள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று அதிகாலையில் இருந்தே தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எழும்பூர், திருவல்லிக்கேணி, ராயபுரம், அண்ணா நகர், கொரட்டூர், அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால், காலையில் அலுவலகம் செல்வோர் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதனிடையே கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு மற்றும் தென் மாவட்டங்களிலும் மழை தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் 12 செ.மீ., மேட்டூரில் 10 செ.மீ., கெலவரப்பள்ளி அணையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தனது எக்ஸ் தள பதிவில், “அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் தொடர்ந்து நிலையான மழை பெய்யும். இது வட தமிழகத்திற்கு மிகவும் தேவையான மழையாகும், இது பருவமழை போன்ற தன்மையைக் கொண்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்று மதியம் முதல் நாளை அதிகாலை வரை மழை தீவிரமடையக்கூடும். சில இடங்களில் 150 மி.மீ. வரை மழை பொழிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 21 வரை தொடரும்
பாலக்காடு கணவாய் வழியாக குளிர் காற்று, மேற்கு மற்றும் வடக்கு திசை காற்றுகள் நுழைவதால், கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மடத்துக்குளம், கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திர எல்லையோரம், வங்கக் கடல் கரையோரம், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை பெய்யும். மே 20 வரை மழை நீடிக்கும், மே 21-ல் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை தொடரும். சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை தீவிரமடையலாம். மீனவர்களுக்கு தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 3 டிகிரி உயரக்கூடும் என்றாலும், மழை காரணமாக வெப்பம் சற்று தணியும் என வானிலை மையம் கணித்துள்ளது. மொத்தத்தில், தமிழகத்தில் இன்று முதல் வருகிற 21 ஆம் தேதி வரை கனமழை தொடரும்.