தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்தும் வகையில், எண்ணும்-எழுத்தும் திட்டம், காலை உணவு வழங்கும் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள், மாணவர் நல உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதோடு, பெற்றோர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு
இந்த நிலையில், 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மார்ச் 1 ல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதுவரை 1.79 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க 16 நாட்களே உள்ள நிலையில், சேர்க்கைப் பணிகளை துரிதப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு முகாம்கள்
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கன்வாடி மையங்களில் பயின்று, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, அங்கன்வாடி ஊழியர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், கிராமப்புறங்களில் பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளின் சிறப்புகள் குறித்து விளக்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தமிழக அரசு, கல்வியை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், மடிக்கணினிகள், மிதிவண்டிகள் மற்றும் மாணவர் உதவித்தொகைகள் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி பெற ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள்
ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மூலம் கற்பித்தல் முறைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு, கற்பித்தல் தரம் மேம்படுத்தப்படுகிறது.
மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் அரசுப் பள்ளிகளின் சாதனைகள் மற்றும் வசதிகள் குறித்து விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சேர்க்கை இலக்கை அடைய, கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இவை அனைத்தும், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிகள் மூலம், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என்பதுடன், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்ற நோக்கமும் நிறைவேறும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.