பாஜகவுடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி வைக்காது என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சிடி நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், கூட்டணிகுறித்துப் பேசுவதற்கான அதிகாரம் தவெக தலைவரிடம் மட்டுமே உள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்த பேட்டியில், “பாஜகவுடன் கூட்டணி இல்லையென தவெக சார்பாக விஜய்யிடமிருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. யாரோ ஒருவரின் கருத்தைக் கட்சியின் நிலைப்பாடாகப் பார்க்க முடியாது.
பாஜக கூட்டணி தொடர்பான முடிவுகளை அகில இந்திய தலைமையகமே எடுக்கும். தற்போது தேசியவாத சக்திகள் ஒன்று சேரவேண்டிய சூழல் வந்துள்ளது என்பது எனது கருத்து. கூட்டணிக்கு யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்பது குறித்து தலைமை முடிவு செய்யும்.திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை எதிர்க்கும் கொள்கை கோட்பாடுகள், ஒருமைப்பாடு உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தன் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் அதிமுக, இன்னும் விஜய் உடன் தொடர்பில் இருப்பதாகவும், தொடர்ந்து கூட்டணிக்கு முயன்று வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படும் நிலையில், இன்னொரு பக்கம் தமிழிசை செளந்தரராஜனின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெகவின் எழுச்சி
2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய தவெக, தொடர்ந்து அமைப்பு ரீதியாக வலுப்பெறும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. கூடவே தமிழக அரசியலில், அதன் தாக்கமும் உணரப்படத் தொடங்கிவிட்டது. விஜய்யின் ரசிகர் பட்டாளம், கல்வி, ஊழல், நல்லாட்சி குறித்த அவரது பேச்சு, மற்றும் அரசியல் களத்தில் அவர் மீதான சேறு பூசப்படாத பிம்பம் ஆகியவை தவெகவை ஒரு சாதாரண கட்சியாக இல்லாமல், குறிப்பிடத்தக்க சக்தியாக மாற்றியுள்ளன. திமுகவையும் பாஜகவையும் எதிர்க்கும் அவரது நிலைப்பாடு, நடுநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை கவர்ந்துள்ளது. விஜய்யின் முதல் மாநில மாநாடு , கடந்த அக்டோபர் 27 அன்று விக்ரவாண்டியில் நடைபெற்றபோது, லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டது, தவெகவின் வாக்கு வங்கி என்னவாக இருக்கும் என்பதை உணர்த்தியது.

தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், “முதலமைச்சர் பதவிக்கு யார் மிகவும் விருப்பமானவர்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 27 சதவீதம் பேர் மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டிருந்தனர். அவருக்கு அடுத்தபடியாக தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து இருந்தார். எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தையும், அப்போதைய தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை 9 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்தையும் பெற்றிருந்தனர்.
தமிழிசையின் அழைப்பும் பாஜகவின் வியூகமும்
இந்த நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய முகமாக விளங்கும் தமிழிசை செளந்தரராஜன், தங்களது கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு விடுத்துள்ள கூட்டணிக்கான அழைப்பு, தமிழக அரசியலில் இளைஞர்கள் மற்றும் முடிவெடுக்காத வாக்காளர்களை கவரும் பாஜகவின் தந்திரமாகவும் வியூகமாகவும் பார்க்கப்படுகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தற்போது இரு கட்சிகளும் இணைந்து 2026 தேர்தலுக்கான வலுவான கூட்டணியை உருவாக்க முயல்கின்றன. விஜய்யின் தவெகவை இணைப்பது, இளைஞர் வாக்குகளை பெறுவதற்கு மட்டுமல்ல, திமுகவுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கும் உதவும்.
விஜய்யின் முடிவு என்ன?
அதே சமயம் அரசியல் பார்வையாளர்கள், ” விஜய் உடனடியாக பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை” எனக் கருதுகின்றனர். தவெகவின் பொதுச் செயலாளர் ஆனந்த், கடந்த ஆண்டு நவம்பரில் அதிமுகவுடனான கூட்டணி வதந்திகளை மறுத்து, கட்சி தனித்து 2026 தேர்தலை எதிர்கொள்ளும் என அறிவித்திருந்தார். மேலும், தவெகவின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமாரும் , “பாஜகவுடன் கூட்டணி இல்லை, விஜய் கொள்கை எதிரிகளுடன் உறுதியாக உள்ளார்” எனத் தற்போது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விஜய்யின் முதன்மை கவனம், தவெக-வை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவதிலும், சமூக நீதி, மதச்சார்பின்மை, தமிழ் தேசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உள்ளது. 2026 தேர்தல் வரை உள்ளூர் தேர்தல்கள் இல்லாததால், தவெகவுக்கு தனது பலத்தை நிரூபிக்க இது ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும். ஆனால், பாஜகவுடன் இணைவது, தமிழகத்தின் பிராந்திய பெருமை மற்றும் மாநில உரிமைகளை வலியுறுத்தும் வாக்காளர்களிடையே தவெகவின் பிம்பத்தை பாதிக்கலாம்.
பாஜக மற்றும் அதிமுக 2023-ல் பிரிந்த பின்னர், கடந்த ஏப்ரலில் மீண்டும் இணைந்தன. இந்த கூட்டணி, திமுகவை எதிர்க்கும் வலுவான மாற்று சக்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவின் உட்கட்சி மோதல்கள் மற்றும் தமிழகத்தில் பாஜகவின் பலவீனமான அடித்தளம் ஆகியவை சவால்களாக உள்ளன. இந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் தவெகவை இணைப்பது, இந்த கூட்டணியை இளைஞர்களிடையே பிரபலமாக்கும் என்று பாஜக நம்புகிறது. ஏற்கெனவே சீமானின் நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்குள் இழுக்க முயன்று, அதற்கு சீமான் இன்னும் பிடி கொடுக்காமல் இருக்கிறார். இந்த நிலையில், “பாஜக கொள்கை எதிரி” என்ற விஜய்யின் நிலைப்பாடு தமிழிசையின் கூட்டணி முயற்சிக்கு சிக்கலாவே இருக்கிறது.
மும்முனைப் போட்டியால் திமுகவுக்கு நன்மை?
தவெக தனித்து போட்டியிட்டால், பல தொகுதிகளில் திமுக, பாஜக-அதிமுக, மற்றும் தவெக இடையே மும்முனைப் போட்டி உருவாகும். இது தேர்தல் களத்தை கணிக்க முடியாததாக மாற்றினாலும், எதிர்க்கட்சி வாக்குகள் பிரிவது திமுகவுக்கு சாதகமாக அமையலாம். தமிழக அரசியலின் கடந்த கால வரலாறு, எதிர்க்கட்சிகள் பிரிந்தால் ஆளும் கட்சி வலுப்படும் என்பதையே பதிவு செய்துள்ளது. எனவே, திமுகவுக்கு எதிரான வாக்குகள் தவெக மற்றும் பாஜக-அதிமுக கூட்டணி இடையே பிரிந்தால், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம்.
இதை கருத்தில் கொண்டே, தவெக-வை தங்கள் கூட்டணிக்குள் இழுக்கு பாஜக முயல்வதாக தெரிகிறது. ஆனால், தமிழிசையின் அழைப்புக்கு விஜய்யின் முடிவு இன்னும் தெளிவாகவில்லை. தனித்து நிற்பது, பாமக, தேமுதிக போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அல்லது எதிர்பாராத திருப்பம் என எதுவாக இருந்தாலும், விஜய் 2026 தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக இருப்பார் என்பது மட்டும் உறுதி!