‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை வைத்து பல்வேறு புதிய சர்ச்சைகள், தற்கொலைகள், நிர்வாக தவறுகள் நடப்பதாக புகார்கள் வெடித்துக் கிளம்புகின்றன.
அந்த கையில், இந்த ஆண்டும் இது தொடர் கதையாகி உள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் மின்தடை காரணமாக குறைந்த வெளிச்சம், மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் மாற்று இடத்திற்கு சென்றதால் சிரமம் ஏற்பட்டது என்றும், இதனால் முழுமையாக ‘நீட்’ தேர்வை எழுத முடியவில்லை என்றும், மறுதேர்வு நடத்தக் கோரியும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் பிற்பகல் 3 மணியிலிருந்து 4.15 வரை மின்தடை ஏற்பட்டு, தேர்வை முழுமையாக எழுத முடியாமல் போனதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை இன்று சனிக்கிழமை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘நீட்’ மறுதேர்வு கோரிய மனு குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதம் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழக மாணவர்களிடம் மட்டுமே கெடுபிடி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது ‘நீட்’ தேர்வு நியாயமற்றது என்று நீண்ட காலமாக போராடி வருகிறது. தமிழ்நாடு ‘நீட்’டை எதிர்ப்பதற்கு முக்கிய காரணங்கள் – அது மாநிலத்தின் கல்வி கொள்கையை பாதிக்கிறது, மாநில பாடத்திட்ட மாணவர்களை விட சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது மற்றும் சமூக நீதி கொள்கைகளை புறக்கணிக்கிறது என்பது தான்.
ஆனால், இந்த வாதங்கள் ஆண்டுதோறும் புறக்கணிக்கப்படுகின்றன. போதாதற்கு தமிழகம், கேரளா போன்ற தென்மாநிலங்களில் மட்டும் மாணவர்கள், குறிப்பாக பெண்கள், தேர்வு மையங்களில் நுழையும்போது கடுமையான மற்றும் அவமானகரமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த ஆண்டு, மாணவிகள் கம்மல்கள், சட்டை பொத்தான்களை அகற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், முறைகேடு தடுப்பு என்ற பெயரில் அவமானகரமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் நீட் தேர்வு முகமை, வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெடித்துக் கிளம்பும் வினாத்தாள் கசிவு தொடர்பான சர்ச்சைகளில் மட்டும் முன்னெச்சரிக்கை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கூட வட மாநிலங்களில் ‘நீட்’ வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகி, பின்னர் அது போலியானது என மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக மாணவர்களிடம் மட்டும் ஆடை, சட்டை பொத்தான்கள் போன்றவற்றில் காட்டும் கெடுபிடிகள் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (National Testing Agency) நோக்கி பல்வேறு கேள்விகளைக் காட்டமாக எழுப்பி இருந்தார். வட மாநிலங்களில் இதுபோன்று கெடுபிடிகள் காட்டப்படுகின்றனவா என்றும் அவர் கேட்டிருந்தார். ஆனால், அதற்கு தேசிய முகமை தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஏன் இந்த இரட்டை நிலை?
தொடர்ந்து தேசிய தேர்வு முகமை கடைப்பிடிக்கும் இந்த இரட்டைத் தரநிலை தான், தமிழ்நாட்டில் ‘நீட்’ எதிர்ப்பை மென் மேலும் தூண்டி, ‘இந்த தேர்வு எங்களுக்கு வேண்டாம்’ என விலக்கு கோர வைக்கிறது. ஆடை, ஆபரணங்களை விட வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு மைய தோல்விகள் தான் அதிக அவசரத்துடன் கண்காணிக்கக் கூடியவை. ஆனால், தேசிய தேர்வு முகமை அதற்கு முன்னுரிமை கொடுப்பதாக தெரியவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.
இங்கே பிரச்னை எது என்றால், ஆவடி போன்ற ஒரு தேர்வு மையத்தில் நடந்த நியாயமின்மை ( மின் தடை) மட்டுமல்ல, தேர்வில் தேசிய சமத்துவத்தை வலியுறுத்தும் NTA போன்ற ஒரு அமைப்பில் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் மட்டும் இரண்டாம் தரமாக நடத்தப்படுவதும் தான். ‘நீட்’ உண்மையில் திறமையை சோதிப்பதற்கானது என்றால், அந்த திறமை புவியியல், உள்கட்டமைப்பு தோல்வி மற்றும் தேர்வை நடத்தும் (NTA) அமைப்பின் அலட்சியத்தால் கைப்பற்றுவதாக இருக்கக்கூடாது!
நீதிமன்ற உத்தரவால் நியாயம் கிடைக்குமா?
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கைக் கீற்றை அளிக்கிறது. ஆனால், இது ஒரு இன்னொரு ஆழமான கேள்வியையும் எழுப்புகிறது. இத்தகைய தவறுகள், சர்ச்சைகள் ஏன் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதுபோன்ற பிரச்னைகளின்போது ஏன் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன?
என்ன பதில் அளிக்கப்போகிறது தேசிய தேர்வு முகமை?