Amazing Tamilnadu – Tamil News Updates

கீழடியும் தொல்லியல் துறையின் அரசியலும்: தமிழர் நாகரிகப் பெருமையை மறைக்க சூழ்ச்சியா?

மிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வு, தமிழர் நாகரிகத்தின் புராதன பெருமையை உலகறியச் செய்த முக்கியமான தொல்லியல் கண்டுபிடிப்பாகும். வைகை ஆற்றங்கரையில் புராதன சங்ககால நாகரிகத்தின் இரும்பு யுகச் சான்றுகளை வெளிப்படுத்திய இந்த அகழாய்வு, தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கு உறுதியான ஆதாரங்களை அளித்தது.

ஆனால், இந்த முக்கியமான கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் (ASI) தொடர்ந்து தாமத உத்திகளையும், திருத்தக் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறது. இது, தமிழர் நாகரிகத்தின் பெருமையை மறைப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

திருத்தம் கோரிய மத்திய தொல்லியல் துறை

2023 ஜனவரியில், கீழடி அகழாய்வை மேற்பார்வையிட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது விரிவான அறிக்கையை ASI-க்கு சமர்ப்பித்தார். இந்த அறிக்கை, அடுக்கு வரிசை, பண்பாட்டு படிவுகள் மற்றும் காலமறிதல் முறைகளின் (Accelerator Mass Spectrometry – AMS) அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், “கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை” என மத்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பியுள்ளது.

அறிக்கையை “மேலும் உண்மையானதாக” மாற்றி மீண்டும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள மத்திய தொல்லியல் துறை, முதல் காலகட்டத்தின் காலவரிசையை “கி.மு. 300-க்கு முன்பு” என்று மாற்ற வேண்டும் என்றும், வரைபடங்கள் மற்றும் ஆவணங்களில் திருத்தங்கள் தேவை என்றும் கூறியுள்ளது. அதே சமயம், இந்தக் கோரிக்கைகளுக்கு எந்த புதிய அறிவியல் ஆதாரமும் வழங்கப்படவில்லை.

‘ஆய்வறிக்கை சரியே’

ஆனால், ” கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை” என்று தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

கீழடி ஆய்வில் அமர்நாத் ராமகிருஷ்ணன்

“அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது. தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு.800-கி.மு.500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என அவர் தனது பதிலில் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் நாகரிகப் பெருமையை மறைக்க முயற்சி?

அமர்நாத் அளித்துள்ள உறுதியான பதிலை பார்க்கையில், இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தின் புதிய கோரிக்கைகள், அறிவியல் அடிப்படையில் அல்லாமல், அரசியல் உள்நோக்கங்களால் உந்தப்பட்டவையாகவே தோன்றுகின்றன எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,கீழடியின் முக்கியத்துவத்தை குறைக்க மத்திய அரசு முயலுவதாக குற்றம்சாட்டி உள்ளார். “கீழடி கண்டுபிடிப்புகள், இந்திய துணைகண்டத்தில் நாகரிகம் வடக்கில் இருந்து மட்டுமே தோன்றியது என்ற கருத்தை மறுக்கின்றன. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்துஸ் பள்ளத்தாக்கு நாகரிகத்தை மட்டுமே முன்னிறுத்த முயல்கிறது. தமிழர் நாகரிகத்தின் புராதனத்தை மறைப்பதற்கு ASI-யை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது,” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமிற்கு மாற்றியது, இந்தக் கண்டுபிடிப்புகளை அடக்குவதற்கான முயற்சியாகவே கருதப்படுகிறது.

கீழடி, தமிழர் நாகரிகத்தின் எழுத்தறிவு, நகர்ப்புற வாழ்க்கை மற்றும் இரும்பு பயன்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இது, வேத காலத்திற்கு முன்பே தென்னிந்தியாவில் மேம்பட்ட நாகரிகம் இருந்ததை வெளிப்படுத்துகிறது. ஆனால், இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தின் தாமத உத்திகளும், தொடர்ச்சியான திருத்தக் கோரிக்கைகளும், இந்த உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிப்பதாகவே தோன்றுகிறது. இது, தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, ஒரு நாகரிக அரசாக உலக அரங்கில் தன்னை முன்னிறுத்த முயலும் இவ்வேளையில், அதன் தெற்கு நாகரிக வேர்கள் மறைக்கப்படுவது முரண்பாடாக உள்ளது. கீழடி, ஒரு தொல்லியல் தளம் மட்டுமல்ல; அது தமிழர் அடையாளத்தின் குறியீடு. இந்த நாகரிகத்தின் பெருமை, அரசியல் தலையீடு இன்றி, அறிவியல் அடிப்படையில் உலகிற்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.

வரலாறு, அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகக் கூடாது!

Exit mobile version