Amazing Tamilnadu – Tamil News Updates

மீண்டும் கொரோனா பரவல்… ஆபத்தானதா புதிய JN.1 வைரஸ்… அறிகுறிகள் என்ன?

டந்த 2020 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது. இருந்தபோதிலும், இந்த தொற்றின் தாக்கம் இன்றுவரை உள்ளது.

இந்த நிலையில் ஹாங்காங்கில், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், சிங்கப்பூர், ஹாங்காங்கில் 1400 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது.இதனால் சிங்கப்பூர், தாய்லாந்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியா/ தமிழகத்தில் என்ன நிலைமை?

இதனிடையே இந்தியாவிலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா,கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மே 19 நிலவரப்படி 257 பேர் இலேசான கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சேலத்தில் 9 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தது கண்டுடறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கன்னியாகுமரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சில பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தமிழக சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இந்த பாதிப்புகள் அச்சப்படுத்தும் வகையில் இல்லை, மேலும் மருத்துவமனைகளில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறியற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறிகளுடனோ உள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை சொல்வது என்ன?

இதனிடையே “தற்போதைய பரவலில் வீரியம் இழந்த ஒமைக்ரான் வகை தீநுண்மியின் உட்பிரிவுகளான ஜெ.என்.1, எக்இசி ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன. புதிதாக உருமாறிய தீநுண்மி பரவவில்லை. உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது” எனத் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், “பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்களும், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சார்ந்த இணைநோய்களால் பாதிக்கப்பட்டவா்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

JN.1 வைரஸின் அறிகுறிகள் என்ன?

JN.1 வைரஸின் அறிகுறிகள் மற்ற ஒமைக்ரான் உட்பிரிவுகளை ஒத்தவையாக உள்ளன. பொதுவான அறிகுறிகள்;

வறட்டு இருமல்

சுவை அல்லது வாசனை இழப்பு

தலைவலி

மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு

சோர்வு மற்றும் உடல் அயர்ச்சி

தொண்டை வலி

குறிப்பாக, JN.1 முந்தைய மாறுபாடுகளை விட வயிற்றுப்போக்கு போன்ற செரிமான அறிகுறிகளை அதிகம் ஏற்படுத்தலாம். சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் காணப்படும் கூடுதல் அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, மனக்குழப்பம் (brain fog) மற்றும் கண்ணில் எரிச்சல் (conjunctivitis) ஆகியவை பதிவாகியுள்ளன.

Exit mobile version