மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், ‘சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு’ மே 11 ஞாயிறன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில், லட்சக்கணக்கான வன்னியர் சமுதாய மக்கள் கலந்துகொண்டனர். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் உரைகள், வன்னியர் சமுதாயத்தின் பாரம்பரியம், பின்தங்கிய நிலை மற்றும் சமூக நீதிக்கான போராட்டத்தை மையப்படுத்தி அமைந்தன.
மாநாட்டில் பேசிய இருவரது உரையின் முக்கிய அம்சங்கள் இங்கே…
69% இட ஒதுக்கீடு: ஜெயலலிதாவை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் தனது உரையில், வன்னியர் சமுதாயத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும், தமிழ்நாட்டில் அவர்களின் பங்களிப்பையும் விவரித்தார். “வன்னியர் சமுதாயம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனிப்பெரும் சமுதாயமாக உள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, சித்திரை முழுநிலவு விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். இது அரசியல் விழா அல்ல, மாறாக, நமது பாரம்பரியத்தின் அடையாளம்,” என்று அவர் குறிப்பிட்டார். மறைந்த காடுவெட்டி குருவை நினைவுகூர்ந்த அவர், “அண்ணன் குரு இல்லாதது மனதுக்கு வருத்தமாக உள்ளது. ஆனால், அவர் நம்முடன் உள்ளார். அவரது கனவு, நமது சொந்தங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும். இந்த லட்சக்கணக்கான மக்களின் கடமை, அந்தக் கனவை நிறைவேற்றுவதாகும்,” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
மேலும் அன்புமணி தனது பேச்சில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “திமுகவின் ஆட்சி வெற்றிகளுக்கு வன்னியர் சமுதாயமே காரணம். 1957-ல் 15 தொகுதிகளில் 14, 1962-ல் 50 தொகுதிகளில் 45, 1967-ல் 138 தொகுதிகளில் 92 தொகுதிகள் வன்னியர் பெரும்பான்மையாக உள்ளவை. திமுகவில் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்கிறது,” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “எம்பிசி-யில் வன்னியர்கள் 12% பங்கு பெறுவதாக அரசு பொய் சொல்கிறது. காவல்துறையில் 109 உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். 75 ஆண்டுகளில் ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி மட்டுமே உள்ளார். இது வன்னியர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே செய்யப்படும் துரோகம்,” என்று காட்டமாக பேசினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை வலியுறுத்திய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என பொய் சொல்கிறார். பஞ்சாயத்து தலைவருக்கு உள்ள அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லையா? சமூக நீதிக்காக, ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாயங்களையும் முன்னேற்ற, தமிழக அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்,” என்று கூறினார்.
“69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அதில் நாம் வெற்றி பெற டேட்டாவை கொடுக்க வேண்டும். அதற்கே சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அது அவர்களின் மிகப்பெரிய சாதனை. எந்தெந்த சமுதாயங்கள் இட ஒதுக்கீட்டை அதிகம் அனுபவிக்கின்றன. இட ஒதுக்கீடு அதிகம் அனுபவிக்காத சமுதாயம் எது என்பதை கண்டறிய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, “யார் பின்னாலு செல்லாதீர்கள். உங்கள் அண்ணன் நான் இருக்கிறேன். மாவீரன் குருவைப் போல, உங்களுக்கு நல்ல கல்வியும், வேலைவாய்ப்பும் வாங்கித் தருவேன். நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது,” என்று உறுதியளித்தார்.
“தமிழ்நாட்டை ஒருமுறை ஆள வேண்டும்’ – ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது உரையில், வன்னியர் சமுதாயத்தின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் போராட்டத்தை விவரித்தார். “நிச்சயமாக ஒரு புரட்சிகரமான போராட்டத்தை அறிவிப்போம். இந்தியாவில் என்னைப் போல் சமூக நீதிக்காக உழைத்த தலைவர் யாருமில்லை. 45 ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் 95,000 கிராமங்களில் என் கால் படாத இடமில்லை. மூன்று ரூபாய் ஊசி போட்டு ஐந்து நாள் டாக்டர் பீஸ் வாங்கி சம்பாதித்து அதை வீட்டிற்கு கொடுத்துவிட்டு ஐந்து நாள் சம்பாத்தியத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று, கல்லிலும் முள்ளிலும் சாப்பாடு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் இரவு பகலாக இந்த மக்களுக்காக பாடுபட்டேன். பாடுபட்டு வருகிறேன். இந்த மக்களுக்காகவே வாழ்ந்தேன்,” என்று உணர்ச்சி மேலிட பேசினார்.
“ஊடகங்கள் எனது பங்களிப்பை மறைத்தன. ஆனால், இந்த மக்கள் நன்றி உள்ளவர்கள். எனக்கு ஆட்சி ஆசை இல்லை. இருந்திருந்தால், நான் இந்தியாவில் கவர்னராகவோ, அமைச்சராகவோ இருந்திருப்பேன். மக்களுக்காகவே வாழ்கிறேன். நீங்கள் செய்யப் போவதெல்லாம் நாமும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு என்னுடைய பேச்சை நீங்கள் கேளுங்கள்” எனக் கூறினார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்த அவர், “இந்த ஊமை ஜனங்களுக்காக உங்களை விட்டால் யார் இருக்கிறார்? 10.5% இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கோட்டைக்குச் சென்று வாதாடினேன். கருணாநிதி இருந்திருந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்திருப்பார். ஆனால், ஸ்டாலினுக்கு மனமில்லை,” என்று குற்றம் சாட்டினார்.