தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வுகள் எப்போது முடிவடையும் என்பது குறித்த கேள்விகள் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. அத்துடன், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதிலும் தாமதம் ஆகுமா என்ற குழப்பமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவுகிறது.
தமிழ்நாட்டில், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வருகிற 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11 ஆம் வகுப்புத் தேர்வு, 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள்
இதனையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6 ல் தொடங்கி 13 ஆம் தேதியுடனும், 10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 13 முதல் 22 க்குள் முடிக்க அரசுத் தேர்வுத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தேர்தல் பணிகளில், குறிப்பாக வாக்குச் சாவடிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் பணியமர்த்தப்படுவார்கள். இதற்காக அவர்களுக்கு முன்கூட்டியே தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
ஏப்ரல் 13 -க்குள் பள்ளி இறுதித்தேர்வு?
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வுகளை, தேர்தல் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே முடிக்க பள்ளிக் கல்வித் துறை தரப்பில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால், ஏப்ரல் 12 அல்லது 13 ஆம் தேதிக்குள் பள்ளி இறுதித்தேர்வுகளை முடிக்க வேண்டும். எனவே, இதற்கான கால அட்டவணை தயார் செய்யும் பணியில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு, இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
10, 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தாமதமாகுமா?
இந்த நிலையில், 10 ஆம் வகுப்புக்கு மே 10 ஆம் தேதி அன்றும், 11 ஆம் வகுப்புக்கு மே14 ஆம் தேதி அன்றும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதி அன்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தேர்தல் தேதி குறுக்கிட்டுள்ளதால், விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிடும் என்பதால், இந்த இரு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படாது எனத் தெரிகிறது. ஆனால், 10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 13 முதல் 22 வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இதுவும் ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு முன்னரே முடிக்கப்படுமா அல்லது தேர்தல் முடிந்த பின்னர் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படி தேர்தலுக்குப் பின்னரே 10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும் எனில், அதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதிலும் தாமதம் ஆகலாம். இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.