விளையாட்டு வீர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஏழாம் தேதியன்று திருச்சியில் துவக்கி வைக்கிறார்.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கி கடந்த 13 நாட்களாக தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் நிறைவு நாள் விழாவில் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் , தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஒட்டுமொத்தத் தொடரில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா, இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு, மூன்றாம் இடம் பிடித்த ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், “விளையாட்டு என்பதை ஒரு இயக்கமாகவே நம்முடைய தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு துறையின் சாதனையாளர்கள் நகரத்தில் இருந்து மட்டும் அல்ல கிராமத்தில் இருந்தும் வரவேண்டும். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டும் அல்ல எல்லோரும் வர வேண்டும், விளையாட்டில் வெல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம் என்று கூறினார்.
அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் (Kalaignar Sports Kit) திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள 12,000 கிராம ஊராட்சிகளில் நம்முடைய அரசு துவக்க இருக்கிறது என்றும் திருச்சியில் அந்தத் திட்டத்தை வரும் 7ம் தேதியன்று தான் துவக்கி வைக்க இருப்பதாகவும் கூறினார்.
“எப்படி படிப்பதற்கு புத்தகங்களை நமது அரசு கொடுக்கின்றதோ, அதேபோல விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று விளையாட்டு உபகரணங்களையும் நாம் கொடுக்க இருக்கின்றோம். அதுவும் விளையாட்டை எப்போதும் நேசித்த கலைஞருடைய நூற்றாண்டில் கலைஞரின் பெயரிலேயே கொடுக்க உள்ளோம்.
வெற்றியாளர்களுக்கு பதக்கமும், விருதுகளும் ஒரு அங்கீகாரம் என்றால் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு இந்த அனுபவம் தான் பதக்கம். எனவே உங்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டிருக்கலாம் ஆனால் உங்களுக்கான களம் அப்படியேதான் இருக்கிறது.
உங்கள் திறமைக்கான அங்கீகாரம் வெகுதொலைவில் இல்லை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 சர்வதேச அளவில் சாதிக்க அவர்களுடைய திறமையை மேன்மேலும் வளர்த்தெடுத்து அவர்களை வெற்றியாளர்களாக்கிட இந்த அரசு அயராது உழைக்கும். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நம்முடைய வீரர்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும்” என்று கூறினார்.