Amazing Tamilnadu – Tamil News Updates

“விளையாட்டுக்கு நிதி கேட்கவில்லை; நேரம் கொடுங்கள்!”: அன்பிலுக்கு செக் வைத்த உதயநிதி!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் நடந்த நிகழ்ச்சியில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.

ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை நௌஷீன் பானு சந்த்-க்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது, “நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெற்றோர்கள் ஆசிரியர் சங்க மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் பேசும் போது அவர் சொன்னார்.. அவருடைய பள்ளிக் கல்வித்துறைக்கு நம்முடைய முதலமைச்சர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 44,000 கோடி ஒதுக்கி உள்ளார். ஆனால், விளையாட்டுத் துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கி உள்ளார்.

முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனக் கூட்டத்தில் பேசினார்கள். முதலமைச்சர் தான் வழங்கவில்லை என்றால், நண்பர் நீங்களாவது கொடுக்கலாமே.

நான் நிதி கேட்கவில்லை. நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அந்த ஆசிரியர்களிடம் ஒரே ஒரு கோரிக்கை தான். பள்ளிகளில் விளையாட்டு நேரத்தைக் குறைத்து, அந்த நேரத்தில் கணிதம், அறிவியல் பாடத்தை நடத்துவதை தவிர்த்து, விளையாட்டு நேரத்தில் மாணவர்களை விளையாட அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் துறைக்கு நிதி தேவையில்லை. விளையாட்டு வீரர்களிடம் உள்ள திறமையை வைத்து நாங்கள் சாதித்துக் காட்டுவோம்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு முதன் முதலில் நிதி வழங்கியது முதலமைச்சர்தான் என்று சொன்ன உதயநிதி, தனது முதலமைச்சர் நிதியிலிருந்து 5 லட்ச ரூபாயை உடனடியாக தங்களுக்கு கொடுத்ததாகவும் கூறினார்.

“இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு 6 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக நிதி உதவி வழங்கி இருக்கிறோம்.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை வெல்லுகின்ற நம்முடைய வீரர், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து உயரிய ஊக்கத் தொகையினை வழங்கி வருகின்றோம். கடந்த வாரம் சாதனை படைத்த 650 வீரர்களுக்கு ரூ 16 கோடியே 24 லட்சம் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கி இருக்கின்றோம்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய கோப்பை ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள், ஸ்குவாஷ் உலகப் கோப்பை, வோர்ல்ட் சர்ஃபிங் லீக், சைக்கிளோத்தான், சென்னை செஸ் மாஸ்டர் 2023, தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டி என தொடர்ந்து நடத்தி வருகிறோம்” என்று மேலும் கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Exit mobile version