தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வில், ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ள புகார், பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களை ஒன்றிய அரசு அநீதியாகவும் பாரபட்சமாகவும் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “தமிழ்நாடு வசூலித்துக் கொடுக்கும் வரிக்கு ஈடாக ஒன்றிய அரசிடம் இருந்து வரிப் பங்கு கிடைப்பதில்லை. ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. உத்தரப்பிரதேசம், பீகாரில் 200% பேரிடர் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு 64% மட்டுமே பேரிடர் நிவாரண நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
‘தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை’
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. மேலும் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு 1.5 லட்சம் கொடுக்கிறது. மீதமுள்ள ரூ.7 லட்சத்தை தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால் பெயர் ‘பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்’ என உள்ளது ” எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”தமிழ்நாடு அரசு வரியாக வசூலித்து ஒன்றிய அரசுக்கு வழங்கும் ரூ.1-க்கு வரிப்பங்காக தமிழ்நாட்டுக்கு கிடைப்பது 29 காசுகள்தான். 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ 5.16 லட்சம் கோடி.
ஆனால், வரிப் பகிர்வாக நமக்கு கிடைத்தது ரூ. 2.08 லட்சம் கோடி மட்டுமே. அதே நேரத்தில் உ.பி. வழங்கும் ஒரு ரூபாய்க்கு ஈடாக அந்த மாநிலத்துக்கு ஒன்றிய அரசு ரூ.2.73 ஐ வரிப்பங்காக கொடுக்கிறது. அதாவது, உ.பி.,யின் பங்களிப்பு ரூ2.24 லட்சம் கோடி. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ரூ 9.04 லட்சம் கோடி. இப்படித்தான் நிதி பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.அதே சமயம், பாஜக ஆளும் மாநிலங்களில் வரிப் பகிர்வு அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரி வருவாய் வசூல் மற்றும் விநியோகத்தில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வு என்பது தமிழ்நாட்டையும் அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பையும் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சினை ஆகும். கடந்த 8 ஆண்டுகளில், மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் தமிழகம் வியக்கத்தக்க வகையில் ரூ.5.16 லட்சம் கோடியை அளித்துள்ளது. ஆனால், அதில் 2.08 லட்சம் கோடி மட்டுமே வரி விநியோகத்தில் தமிழ்நாடு பெற்றுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மாநிலத்திற்கான வருமானத்தில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய இடைவெளி, சமச்சீரான வரிப்பகிர்வு முறையின் அவசியத்தை உணர்த்துகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதார வலிமை என்ன என்பதும் தேசிய பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பு கணிசமான உள்ளது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இப்படியான நிலையில், தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவது கவலை அளிப்பதாக உள்ளது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு மாநிலத்தை மாற்றாந்தாய் அணுகுமுறையுடன் நடத்துவது நியாயமா என்பதை உணர்ந்து, இனியாவது தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வுக்கான
அளவை ஒன்றிய அரசு மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.