Amazing Tamilnadu – Tamil News Updates

முதலீட்டாளர் மாநாடு: தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்!

சென்னையில் நாளை தொடங்க இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில், காற்றாலை மின்சார உற்பத்தியை தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வகையிலான ‘புதிய கொள்கை’ ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட இருக்கிறது.

இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 25 ஆயிரத்து 406 மெகாவாட் ஆகும். அதில் தமிழ்நாட்டின் பங்கு 7 ஆயிரத்து 387 மெகாவாட். கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, குஜராத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 11176.12 மெகா வாட் ஆகும். தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 10377.97 மெகாவாட் ஆகும்.

இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கென “தமிழ்நாடு காற்றாலை மின் திட்டங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை” என்ற கொள்கையை, உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது.

அந்தக் கொள்கையின் படி, ஏற்கனவே உள்ள பழைய காற்றாலைகளைப் புதுப்பித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழைய காற்றாலைகளில் பழைய டர்பைன்கள் மாற்றப்பட்டு, புதிய டர்பைன்கள் பொருத்தப்படும். அதே போல் கியர்பாக்ஸ், பிளேடுகள், ஜெனரேட்டர்கள் மற்றும் கன்ட்ரோலர்களும் புதுப்பிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, கடந்த 1986 ல் தொடங்கியது. அப்போது 55 லிருந்து 600 மெகாவாட் வரையிலான உற்பத்தித் திறனுடன் தொடங்கப்பட்டது. அப்போது பொருத்தப்பட்ட எந்திரங்கள் காலாவதியான போதிலும், இப்போதும் அவை செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் பழைய டர்பைன்கள் மாற்றப்பட்டு புதியவை பொருத்தப்படும் பட்சத்தில், அவற்றின் உற்பத்தித் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு காற்றாலைகள் புதுப்பிக்கப்படும் பட்சத்தில், அவற்றின் மின் உற்பத்தித் திறன் 1.5 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version