Amazing Tamilnadu – Tamil News Updates

முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு, புல்லட் பேரணி, ட்ரோன் ஷோ… களைகட்டிய திமுக இளைஞரணி மாநாடு!

புல்லட் பேரணி, ட்ரோன் ஷோ, ‘நீட்’ ஒழிப்பு கையெழுத்து பட்டியல் ஒப்படைப்பு உள்ளிட்ட தொடக்க நிகழ்ச்சிகளுடன் சேலம் திமுக இளைஞரணி மாநாடு களைகட்டிய நிலையில், ‘மாநில உரிமை மீட்பு’ முழக்கத்தோடு நாளை நடைபெற இருக்கும் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆற்ற உள்ள தலைமை உரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புரை ஆகியவை குறித்து திமுக-வினரிடையே மட்டுமல்லாது தமிழக அரசியல் வட்டாரத்திலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை ( ஜனவரி 21 ) திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெற உள்ள பெத்தநாயக்கன்பாளையம் மாநாட்டு பந்தலை நோக்கி காரில் புறப்பட்டார் ஸ்டாலின். வழி நெடுக முதலமைச்சரை திமுகவினர் திரண்டு வந்து வரவேற்றனர். வரவேற்பை ஏற்றுக்கொண்டு பெத்தநாயக்கன்பாளையம் வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார்.

புல்லட் பேரணி, ட்ரோன் ஷோ

அதனைத் தொடர்ந்து முதலமைச்சரிடம் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டுச் சுடரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனையடுத்து, நீட் தேர்வு ஒழிப்புக்காக தமிழகம் முழுவதும் சென்ற புல்லட் பேரணி மாநாட்டுக்கு வந்தது. அதையும் முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும் அவரிடம் நீட் தேர்வு விலக்கு கோரி பெறப்பட்ட கையெழுத்துப் பட்டியலும் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மாநாட்டு திடல் அருகில், 1500 ட்ரோன்களை கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன் ஷோ-வையும் முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து முரசொலி புத்தக நிலையம், அன்பகம் திமுக இளைஞர் அணி வரலாறு சிறப்பு புகைப்பட கண்காட்சி நிலையம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மாநாட்டைத் துவக்கி வைக்கும் கனிமொழி

இந்த நிலையில், திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, மாநாடு பந்தல் அருகில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து, மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மு.க‌.ஸ்டாலின், கொடிக்கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது முழு உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளார். அதன் பின்னர், நிகழ்ச்சியின் நுழைவாயில்களை எழிலரசன் எம்.எல்.ஏ திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகள், மாநில சுயாட்சி, கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் நேரு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி உள்ளிட்ட 22 பேர் உரையாற்ற உள்ளனர்.

மாநாட்டுத் தீர்மானங்கள், முதலமைச்சர் உரை

தொடர்ந்து மாலை 4 மணிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை உரையாற்ற, பின்னர் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இளைஞரணி மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் மாநில சுயாட்சி, மாநில அதிகாரத்தில் தலையிடும் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவிப்பது, நீட் தேர்வு ஒழிப்பு, ஒன்றிய பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவது எனப் பெரும்பாலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் திமுக-வும் அங்கம் வகிப்பதால், மாநாட்டின் தீர்மானங்கள், முதலமைச்சர் ஆற்ற உள்ள உரை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவிலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version