பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் ஆலோசகர்களை அதிகரிக்க மாநில கல்வித்துறை தீர்மானித்துள்ளது.
மாணவர்களின் கல்வி சம்பந்தமான கேள்விகள் மற்றும் அவர்களின் உளவியல் பிரச்னைகளுக்கு, 14417 எனும் ஹெல்ப்லைன் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகளைத் தெரிவிக்கும்போது, அவர்களுக்குப் பதில் சொல்ல 20 பேர் பணியாற்றி வந்தனர்.
மாணவர்களின் போன் கால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்குப் பதில் சொல்லும் அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனும் பிரச்னை வந்தது. இந்நிலையில், அவர்களின் எண்ணிக்கையை 20 லிருந்து 75 ஆக மாநில கல்வித்துறை உயர்த்தியுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கல்வி, உயர்படிப்பு, பள்ளியில் பிரச்னைகள் போன்றவை தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டு, ஒருநாளைக்கு 600 அழைப்புகள் வரையில் வருவதாகவும், போதுமான பணியாளர்கள் இல்லாததால் பல அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போவதாகவும் கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த ஹெல்ப்லைனில் 24 மணி நேரமும் வரக் கூடிய அழைப்புகளை அட்டென்ட் செய்வதற்காக இரண்டு கவுன்சிலர்கள் இருந்தனர். ஒருவருக்கு கவுன்சிலிங் செய்ய வேண்டுமானால் குறைந்தது முக்கால் மணி நேரமாவது ஆகும். எனவே அந்த இரண்டு பேர் போதாது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று யார் பேசினாலும் அவர்களின் கால்களை எடுக்க முடியாமல் போகக் கூடாது என்று கல்வித்துறை முடிவு செய்து, தற்போது அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்களின் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது.
வரக் கூடிய கால்களை முதலில் அலுவலர்கள் அட்டென்ட் செய்வார்கள். பின்னர் தேவையைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு அந்த அழைப்பை மாற்றி விடுவார்கள். பாலியல் புகார்கள், மாணவர்களுக்கு இழைக்கப்படும் சித்ரவதைகள் போன்ற எது தொடர்பாகவும், இயல்பாகவும் பயமில்லாமலும் மாணவர்கள் பேசுவதற்கு ஏதுவாக கவுன்சிலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே இருந்ததை விட மூன்று மடங்குக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பிரச்னைகள் பெரிய அளவில் தீர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.