Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

பெண்களுக்கு சொத்துரிமை… 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலைஞரின் பாடம்!

மிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் மு. கருணாநிதி தொடா்பான குறிப்புகள் பள்ளிக் கல்வி பாடப் புத்தகத்தில் சோ்க்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.

அதன்படி, கடந்த கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் ‘செம்மொழியான தமிழ் மொழி’ எனும் தலைப்பில், கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

10 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் கருணாநிதி

அதைத் தொடா்ந்து வரவிருக்கும் 2024-2025 ஆம் கல்வியாண்டிலும் பள்ளிப் பாடநூல்களில் அவரை பற்றிய குறிப்புகள் பாடங்களில் சோ்க்கப்பட்டுள்ளன. அதன்படி, 10 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கலைஞர் கருணாநிதியின் சிறப்புகள் என்ற பெயரில் 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம் கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தத் தகவலை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது.

8 ஆம் வகுப்பில் பெண்களுக்கு சொத்துரிமை பாடம்

இந்த நிலையில், தற்போது 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய குறிப்புகள் பாடத்தில் இடம்பெற்றுள்ளன. அதாவது, சமூக அறிவியல் குடிமையியல் பிரிவில், ‘பெண் உரிமை சாா்ந்த சட்டங்கள்’ என்ற தலைப்பின் கீழ் வரும் பாடத்தில் கருணாநிதி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் ‘கூட்டு குடும்ப சொத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்காக, இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு 1989-ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் இந்து கூட்டு குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத் திருத்ததைத் தொடர்ந்து, தேசிய அளவிலும் 2005 ஆம் ஆண்டில் இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடம் இடம்பெறும் பக்கத்தில் கருணாநிதி சட்டமன்றத்தில் உரையாற்றும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

கருணாநிதி குறித்த இந்த பாடங்கள் இடம்பெற்ற புத்தகங்கள் அனைத்து, வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டு, அச்சிடடப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

Exit mobile version