Amazing Tamilnadu – Tamil News Updates

பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பால் வார்த்த முதலமைச்சர்!

மிழகத்திலுள்ள சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், அவர்களது கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை கணிசமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டின் பால் உற்பத்தியாளர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும், நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

விவசாய குடும்பங்களின் காமதேனு

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாக பால் உற்பத்தி உள்ளது. விவசாய குடும்பங்களுக்கு இது ஒரு நிலையான வருமானத்தை வழங்குகிறது. குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல திடீர் செலவுகளுக்கும் பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் கைகொடுக்கிறது என்பதால், விவசாய குடும்பங்களின் காமதேனுவாகவே மாடுகள் பார்க்கப்படுகின்றன.

ஆவினின் கொள்முதலும் விற்பனையும்

அதே சமயம் நுகர்வோர்களுக்கு தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் தரமான பாலை, நியாயமான விலையில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் இயங்கி வரும் ஆவின் நிறுவனம், 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.

கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை

இந்த நிலையில், சமீப ஆண்டுகளாக கால்நடைத் தீவனம், கால்நடை பராமரிப்புக்கான செலவினங்கள் உயர்ந்து, உற்பத்திச் செலவு அதிகரித்து வருவதால் வருவதால், பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது. இதனால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர்

இதனையடுத்து அவர்களது கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழிவகுத்திடவும், ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் டிச.18-ம் தேதி முதல் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலம் சுமார் நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

கொள்முதல் விலை ஒரே ஆண்டில் ரூ. 6 உயர்வு

பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்.பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் பால் உற்பத்தி செய்து, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கி, பொருளாதார மேம்பாடு அடைவதுடன் கிராமப் பொருளாதாரம் உயர்ந்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு 05.11.2022 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் ஊக்கத்தொகையாக வழங்கி, ஒரே ஆண்டுக்குள் 6 ரூபாய் அளவுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version