தமிழ்த் திரையுலகிலும் திரையிசை ரசிகர்களிடையேயும் தீரா துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது இசைஞானி இளையராஜாவின் மகளும், தேசிய விருது வாங்கிய பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் மறைவு.
ரசிகர்களுக்கு அவரது மரணம் அதிர்ச்சி என்றால், ’47 வயதுக்குள் இறக்கும் அளவுக்கு அவருக்கு என்ன ஆச்சு?’ என்பது திரையுலக பிரபலங்களுக்கே அதிர்ச்சி கலந்த துயரமாக அமைந்துவிட்டது. உண்மையில் பவதாரணி கல்லீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தது திரையுலகிலேயே பெரும்பாலானோருக்குத் தெரியாது. ராஜாவின் நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டம் மட்டுமே அறிந்திருந்த நிலையில், ஜனவரி 25 அன்று மாலை தான் அவரது மரணச் செய்தி அனைவரையும் அதிர்ச்சிய அடைய வைத்தது.
பவதாரணி கல்லீரல் புற்றுநோய் நான்காம் நிலையை அடைந்தது கடைசி நேரத்தில் தான் கண்டறியப்பட்டதாகவும், சகோதரர் யுவன் சங்கர் ராஜாவின் முயற்சியின் பேரிலேயே ஆயுர்வேத சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் ராஜா வீட்டுக்கு நெருக்கமான உறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேனி பண்ணை வீட்டில் நல்லடக்கம்
அங்கு தலைநகர் கொழும்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி 26 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனது இசை நிகழ்ச்சிக்காக கடந்த 24 ஆம் தேதி கொழும்பு வந்த இளையராஜாவுக்கு அதிர்ச்சி. சிகிச்சை பலனளிக்காமல், திடீர் மாரடைப்பும் ஏற்பட பவதாரணி உயிரிழந்தார். மகளின் மரணம் இளையராஜாவை உலுக்கி விட்டது. மனம் உடைந்து போனார்.
இந்த நிலையில், பவதாரிணியின் உடல் நேற்று பகல் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தி.நகரிலுள்ள ராஜாவின் இல்லத்துக்கு வந்தது. உறவினர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலியைத் தொடர்ந்து நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டம், லோயர் கேம்ப் பகுதியில் உள்ள ராஜாவின் பண்ணை வீட்டில் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
“அன்பு மகளே…” என உருகிய இளையராஜா
மகளின் மறைவால் உடைந்துபோய் உள்ள ராஜா, தனது எக்ஸ் வலைதளத்தில், “அன்பு மகளே…” என உருக்கமான வார்த்தையுடன், பவதாரிணி குழந்தையாக இருக்கும்போது எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்திருப்பதைக் கண்ட ராஜாவின் ரசிகர்களுமே கண்ணீருடன் ராஜாவுக்கு ஆறுதலான வார்த்தைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
கூடவே கமல், ரஜினி, ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கி ஏராளமான திரைப்பிரபலங்களும், தங்களது சமூக வலைதள பக்கங்களில் பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் செய்திகளை வெளியிட்டு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருவுக்கு ஆறுதல் கூறி இருந்தனர்.
ஜென்சியை நினைவுபடுத்திய தனித்துவமான குரல்
இந்த நிலையில், பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில், அவர் பாடிய ஏராளமான ஹிட் பாடல்களை ரசிகர்கள் பகிர்ந்து, பவதாரிணியின் தனித்துவமான குரலினிமை குறித்தும், எந்தெந்த படங்களில் எந்தெந்த பாடல் ரசிக்கும்படியாக இருந்தது என்பது குறித்த விவரங்களையும் குறிப்பிட்டு சிலாகித்து வருகின்றனர். சொல்லப்போனால், 80 -களில் ராஜாவின் இசையில் தனித்து ஒலித்த பின்னணி பாடகி ஜென்சியின் பாடல்கள் எப்படி நாயகிகளின் ஏக்கங்களையும் பரிதவிப்புகளையும் ரசிகனுக்கு கடத்தி, தனித்துவமாக ஒலித்ததோ, அப்படியே பவதாரிணியின் குரலிலும் ஒருவித அப்பாவித்தனமும் ( Innocent ) எளிமையும் கலந்த இனிமை இருந்தது.
ஹிட்டடித்த மறக்க முடியாத பாடல்கள்
‘ராசய்யா’ படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமான ‘மஸ்தானா… மஸ்தானா…’ , அதே படத்தின் ‘காதல் வானிலே… காதல் வானிலே… ‘, தேசிய விருது வாங்கிக் கொடுத்த ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘மயில்போல பொண்ணு ஒண்ணு…’ , பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘ராமன் அப்துல்லா’ படத்தில் அருண்மொழியுடன் பாடிய ‘என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்கிறே… ‘, விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர் படத்தில் இடம்பெற்ற ‘ நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா…, ‘அழகி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஒளியிலே தெரிவது தேவதையா…’, பாடல் தொடங்கி, காதலுக்கு மரியாதை படத்தில் வந்த ‘இது சங்கீத திருநாளோ’, செந்தூரம் படத்தில் உன்னிகிருஷ்ணன் உடன் இணைந்து ‘ஆலமரம் மேல வரும்’ பாடல்,
‘கரிசக்காட்டுப் பூவே’ படத்தில் இடம்பெற்ற ‘மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்’ பாடல், ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் ஹரிகரனுடன் பாடிய, ‘தென்றல் வரும் வழியே…’, ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்… பாடல், ‘கட்டப்பஞ்சாயத்து’ படத்தில் ஜாலி ஆப்ரஹாம் உடன் இணைந்து பாடிய ‘ஒரு சின்ன மணிக்குயிலு…’ பாடல் எனும் நீளும் பட்டியலில், கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் ‘மாநாடு’ படத்தில் “மாஷா அல்லாஹ்” என்ற பாடலை தான் பாடி இருந்தார்.
தந்தை இளையராஜா, அண்ணன் கார்த்திக்ராஜா மற்றும் தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையில் அதிக பாடல்களை பாடி இருந்தாலும், ஏ.ஆர். ரஹ்மான், ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட வேறு பல இசையமைப்பாளர்களின் பாடல்களையும் பாடி உள்ளார் பவதாரிணி.
பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பலரும் குறிப்பிட்டது, “இறைவன் இத்தனை சீக்கிரம் அவரை தன்னிடம் அழைத்துக் கொண்டிருக்கக் கூடாது” என்பதுதான். உண்மைதான்… Innocent ஆக ஒலிக்கும் அந்த இனிமையான குரல் இறைவனுக்கும் பிடித்திருக்கும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொண்டிருக்கக் கூடாது… இறைவன் இரக்கம் காட்டி இருக்க வேண்டும்!