Amazing Tamilnadu – Tamil News Updates

‘நீட்’ தேர்வு குளறுபடியும் நீளும் சந்தேகங்களும்… நீதிமன்றம் தீர்வை தருமா?

ளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நழைவுத் தேர்வு, கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்தது. என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையால் ( National Testing Agency) நடத்தப்படும் இந்த தேர்வுக்கான முடிவுகள், கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனா்.

குழப்பமும் குளறுபடியும்

இந்த நிலையில், நீட் நுழைவு தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்கள் சந்தேகிக்கின்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாலும் குழப்பம் நிலவுகிறது.

நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால் கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என சக மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இது குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாலேயே மாணவர்கள் 719 மதிப்பெண்கள் பெற்றதாக விளக்கம் அளித்தது.

முன்னதாக ஜூன் 14 ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று வெளியானதில் கூட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில் மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவர்கள், கோழிக்கோடு நீட் பயிற்சி மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கருணை மதிப்பெண்களை நீக்கி புதிய தேர்வு முடிவுப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையின்போது தேசிய தேர்வு முகமை அளிக்கும் பதிலின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் எத்தகைய உத்தரவை பிறப்பிக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு மாணவர்களின் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை மறு தேர்வுக்கு உத்தரவிடப்பட்டால், அது தீர்வுக்கு வழிவகுக்குமா அல்லது மேலும் குழப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.

இதனிடையே நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சமூக வலைத்தளத்தில், “நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்? மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் ” என வலியுறுத்தி உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அறைகூவல்

இந்நிலையில், நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்: நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.சமூகநீதிக்கு எதிரானவை.தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், “மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்யவும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து நீட் தேர்வுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புக் குரல்கள், மத்தியில் புதிதாக பதவியேற்க உள்ள மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு முதல் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

Exit mobile version