Amazing Tamilnadu – Tamil News Updates

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் எப்போது?

ருகிற ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒருபுறம் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இன்னொருபுறம், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அநேகமாக இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் மட்டுமே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தரப்பில் இன்னும் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்குள் வர இருக்கின்றன என்பதே இன்னும் முடிவாகவில்லை. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அக்கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தின், துணைதேர்தல் ஆணையர் அஜய் பதூ, தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, வருமான வரித் துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இவ்வாறு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதால், அதற்கேற்ப தமிழ்நாட்டில் பள்ளித் தேர்வுகளையும் பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் முன்கூட்டியே நடத்த தமிழக கல்வித் துறை தீர்மானித்துள்ளது.

ஏற்கெனவே மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 1 முதல் 22 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 10 நாட்கள் முன்னதாகவே இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் முன்கூட்டியே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் நிலையில், இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேதிகள் அறிவிக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

Exit mobile version