Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாட்டில் 17 மாவட்ட கலெக்டர்கள் பெண்கள்… மகளிர் முன்னேற்றத்துக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகம்!

மிழ்நாட்டில், பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் நீதி கட்சி ஆட்சி தொடங்கி, இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரை கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்கள் மற்றும் திட்டங்களால், அவர்கள் பல துறைகளில் முன்னேறி, பல உயர் பதவிகளை வகிக்கின்றனர். இதன் உச்சம்தான், மொத்தமுள்ள 38 மாவட்ட ஆட்சியர்களில் 17 பேர் பெண்கள் என்ற பெருமை மிகு நிலையை அடைந்திருக்கிறது தமிழகம்.

தமிழ்நாடு இத்தகைய நிலையை எப்படி அடைந்தது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்…

அடித்தளமிட்ட நீதிக் கட்சி

திமுக-வின் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சியும் நீதிக்கட்சி அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டு, பெரும்பங்கு ஆற்றின. 10-5-1921 அன்று சட்டம் இயற்றி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது நீதிக்கட்சி அரசு. இது பெண்மைக்கு நீதிக்கட்சி சூட்டிய பொன் மகுடம் ஆகும். நீதிக் கட்சியின் ஆட்சியில்தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நீதிக்கட்சி முன்னோடிகள்

அதைத் தொடர்ந்து டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி சென்னை மாகாண சட்டமன்ற துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அப்போது, உலக அளவில் பெண் ஒருவர் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக ஆக்கப்பட்டது சென்னை மாகாணத்தில்தான் என்ற பெருமையை அம்மாகாணம் பெற்றது.

அரசுப் பணிகளில் 30% இட ஒதுக்கீடு

1973 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டனர். 1973-74ல் பணிக்குச் செல்லும் மகளிருக்கு தங்கும் விடுதிகள் நடத்திய சேவா சங்கத்திற்கு அரசு நிதி உதவி வழங்கியது.

1989-91 திமுக ஆட்சியில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கான சட்டம் 1990 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீடு திட்டத்தின் கீழ்பணியில் சேர்ந்த ஏராளமான பெண்கள் இப்போது பதவி உயர்வு பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மேலும், அவரது ஆட்சியில்தான் ஆரம்பப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பதவிகளில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அதேபோன்று பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதும் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில்தான்.

மகளிர் சுய உதவிக் குழு

இந்தியாவிலேயே முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழு முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு தர்மபுரியில் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் உட்பட பல்வேறு மகளிர் நலன் சார்ந்த திட்டங்களும் கொண்டுவரப்பட்டன.

ஸ்டாலின் ஆட்சியிலும் தொடரும் திட்டங்கள்

அந்த வகையில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2021, மே 7 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் முக்கியமான ஒன்று, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டம். இந்த திட்டத்தால், இன்று லட்சக்கணக்கான பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து மாதத்திற்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை மிச்சப்படுத்தப்படுவதாகவும், அது தங்களது குடும்பச் செலவுகளுக்காக பெரிதும் உதவிகரமாக இருப்பதாகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோன்று மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், படித்து பட்டம் பெற்று வரும் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும் கவுரவமும் அளித்து, அவர்களை அரசுப் பதவிகளில் அமர்த்தி, பெண்களைப் பெருமைப்பட வைப்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.

17 மாவட்ட கலெக்டர்கள் பெண்கள்

அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதுள்ள 38 மாவட்ட ஆட்சியர்களில் 17 பேர் பெண்கள். தமிழ்நாட்டில் பணிபுரியும் 323 ஐஏஎஸ் அதிகாரிகளில் 96 பேர் பெண்கள். உள்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா திறம்பட பணியாற்றி வருகிறார். இதுபோல, 10 முக்கிய துறைகளின் செயலாளராக பெண்களைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளார். முதலமைச்சரின் செயலாளர்களில் ஒருவரும் பெண்தான். தமிழ்நாடு தேர்தல் ஆணையராக சமீபத்தில் ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை முதன்மை செயலாளர் அமுதா

இதுபோல, காவல் துறையில் அனைத்து மட்டங்களிலும் குறிப்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி உள்பட உயர் பதவிகள் பெருபாலானவற்றில் பெண் அதிகாரிகளே மிடுக்குடன் பணிபுரிகிறார்கள். மேலும், நீதித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டில் பெண்கள் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்ற திட்டம் மிக முக்கிய காரணம் ஆகும். இந்த இட ஒதுக்கீடு இருப்பதால்தான் பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கிறது. அந்த வகையில் மகளிர் முன்னேற்றத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது தமிழகம்.

இவற்றிற்கெல்லாம் முழு முதற்காரணம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திமுக ஆகிய இயக்கங்கள் இதற்காக போட்ட அடித்தளங்கள் தான் முக்கிய காரணம் என்றால், அது மிகையில்லை!

Exit mobile version