Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாட்டில் IIT படிப்புகள் மீது அதிகரிக்கும் ஆர்வம்… JEE தேர்வில் நெல்லை, கோவை மாணவர்கள் சாதனை!

த்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் ( பி.டெக்) படிப்புகளில் சேர, ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும் இந்த தேர்வானது, Main (முதல்நிலை தேர்வு) மற்றும் Advance (முதன்மை தேர்வு) என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இந்த நிலையில், நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை ஜேஇஇ தேர்வு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

இதில் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார். அவர்களில் 70,048 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், 300/300 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்தியத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற 23 மாணவர்கள் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த் பிரதீஷும் இடம்பெற்று, மாநிலத்துக்குப் பெருமை சேர்த்திருந்தார்.

இந்த நிலையில், ஜேஇஇ இரண்டாம் கட்ட முதல்நிலைத் தேர்வு, இம்மாதம் 4 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 544 மையங்களில் 10.67 லட்சம் பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

முகுந்த் பிரதீஷ்

இதிலும் நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் மற்றும் கோவையைச் சேர்ந்த என். ஸ்ரீராம் ஆகியோர், அகில இந்திய அளவில் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்த 56 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்து, தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

இதில் முகுந்த் பிரதீஷ், இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சென்னையைச் சேர்ந்த ஆர். ஆராதனா என்ற மாணவி, 99.99 சதவிகிதம் பெற்று, அகில இந்திய அளவில் 238 ஆவது ரேங்குடன், மாணவிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

என். ஸ்ரீராம்

ஆர்வம் காட்டும் தமிழக மாணவர்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே ஐஐடி-யில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்பட்ட நிலையில், சமீப வருடங்களாக ஐஐடி மற்றும் என்ஐடி-யில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதில் தமிழ்நாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து பேசும் தனியார் பயிற்சி மைய நிர்வாக அதிகாரி ஒருவர், இந்த முறை பொது பிரிவினருக்கான ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண் 90.7 சதவீதத்திலிருந்து 93.2 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும், மே 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜேஇஇ முதன்மை தேர்வை எழுத, சுமார் 2.5 லட்சம் பேர் தகுதி பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஜேஇஇ தேர்வுக்கான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருவதாகவும், ஜேஇஇ மெயின் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் இருவரும் சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறுகிறார். அதே சமயம், இந்த முறை கட் ஆஃப் மதிப்பெண் அதிகரித்திருப்பதால், தமிழகத்திலிருந்து ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதனிடையே இந்த தேர்வு முடிவுகள் தொடர்பான கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/69227700 ஆகிய எண்கள் அல்லது jeemain @nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version