டிஎன்கே என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? DNK என்றால் டாக் நிர்யத் கேந்த்ரா (Dak Niryat Kendra) தபால் நிலையங்களில் பொருள் ஏற்றுமதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய திட்டம் அது.
வழக்கமாக தபால், சிறிய பார்சல் என்பதைத் தாண்டி பொருள் ஏற்றுமதி என்ற கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது தபால் துறை. சிறு தொழில்கள் குறு தொழில்களுக்கு உதவும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
நாகாலாந்தில்தான் அதை ஆரம்பித்து வைத்தார்கள். உலர் பழங்களில் ஆரம்பித்து, அங்கே எதுவெல்லாம் ஸ்பெஷலோ அதுவெல்லாம் ஏற்றுமதியானது. இப்போது அது தமிழ்நாட்டிற்கும் வந்து விட்டது.
இந்த கேந்திராவிற்குக் கீழ் 315 ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் 49 மையங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. தற்போது அது 65 ஆக மாறி இருக்கிறது. இந்த நிதியாண்டின் முடிவில், அதாவது 2024 மார்ச்சுக்குள் அந்த மையங்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது தபால்துறை. ஏற்றுமதி தொடர்பான ஆவணங்கள், தளவாடங்கள், சுங்க நடைமுறைகள் மற்றும் பேக்கிங் என்று அத்தனைக்கும் உதவுகிறது இந்த டிஎன்கே. தாங்கள் உற்பத்தி செய்த பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விரும்பும் நிறுவனங்கள் டிஎன்கேவை அணுகினால் போதும் அத்தனை வசதிகளும் கிடைக்கும்.
DNKவில் பதிவு செய்ய: https://dnk.cept.gov.in/customers.web/register என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
இதுவரையில், தமிழ்நாட்டில் டிஎன்கே மூலம் ஏற்றுமதியான பொருட்களின் மதிப்பு மூன்று கோடியே 11 லட்சம் ரூபாய். 2030-ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு சொல்லப் போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லி வருகிறார். அந்த இலக்கை அடைவதில் டிஎன்கே முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.