Amazing Tamilnadu – Tamil News Updates

ஏற்றுமதிக்கான பழ உற்பத்தி, சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு; வீட்டுத் தோட்டத்துக்கு ஊக்குவிப்பு!

மிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், வீட்டுத் தோட்டத்தில் பழங்கள், காய்கறி வளர்க்க ஊக்குவிக்கவும், ஏற்றுமதிக்கான பழ உற்பத்தியையும் சாகுபடியையும் அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

வீட்டுத் தோட்டத்தில் பழங்கள், காய்கறி வளர்க்க ஊக்குவிப்பு

வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்துமிக்க பழங்கள், காய்கறி வளர்ப்பதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிரி பூச்சிக்கொல்லி பண்புகளுடைய ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை நடவு செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த “தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும்.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும். ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த “தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு. ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.

புதிய பலா ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு. பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம். விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.

பேரிட்சை சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ. 12,000

செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

பேரிட்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு. இதன்படி தூத்துக்குடி, வேலூர், தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 250 ஏக்கரில் பேரீட்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 12,000 வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு. புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளையும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்தார்.

Exit mobile version