Amazing Tamilnadu – Tamil News Updates

கிரைய பத்திரங்கள் ரத்து நடைமுறையில் மாற்றம்… தமிழக அரசின் புதிய உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

ருவர் ஒரு சொத்தை வாங்கும் போது அதை வாங்குபவரும், விற்பவரும் இணைந்து கையெழுத்திட்டு பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் தான் கிரைய பத்திரம் எனப்படுகிறது.

ஒரு நிலம்-வீடு என எந்த சொத்து வாங்கினாலும் அதனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரைய பத்திரமாக பதிவு செய்வார்கள். இந்த பதிவுக்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் வசூலிக்கிறது.

கிரையம் முடித்தவர்கள், மீண்டும் அந்த கிரையத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் இடமுண்டு. இருதரப்பும் சேர்ந்து இந்த ரத்து ஆவணம் பதிவை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ரூ.50 கட்டணம் ஆகும். ஆனால், அதன் உரிமை மாறாது. அதாவது, சொத்தை வாங்கியவர் பெயரில் தான் அந்த சொத்து இருக்கும். மீண்டும் பழைய உரிமையாளர் பெயரில் மாறாது.

இதனால், பழைய உரிமையாளர் பெயரில் சொத்தை மாற்றுவதற்கு மீண்டும் புதிதாக ஒரு கிரைய ஆவணம் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மீண்டும் பழையபடி 9 சதவிகிதம் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், பொதுமக்களுக்கு வீண் பண விரயம் ஏற்பட்டுவந்தது.

இந்த நிலையில், கிரைய பத்திர ரத்து நடைமுறையில் தற்போது தமிழக பத்திரப்பதிவு துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, கிரயப் பத்திரத்தை ரத்து செய்யும் போது, ‘இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது’ என்ற முத்திரை இனி குத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் மூலம், ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கு மீண்டும் அந்த சொத்து சென்று விடும். இந்த ரத்து ஆவணத்திற்கு ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version