தமிழ்நாடு சட்டசபையில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், அனைத்து வேளாண் செயல் முறைகளையும் ஊக்கப்படுத்திட ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில், வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும், உழவர்களை தமிழ்ச்சமூகம் எப்போதும் உச்சத்தில் வைக்கிறது என்றும், அரசின் சீர்மிகு திட்டத்தால் தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பளவு உளர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட மேலும் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் வருமாறு…
நடப்பாண்டில் 50,000 மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஊழவர் சந்தைகள், மின்னணு சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படுகின்றன. 2020-2021 ஆம் ஆண்டில் 89.06 லட்சம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு, 2022 -23 ஆம் ஆண்டில் 95.39 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
மண்வளம் பேணிக்காக்கவும் மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல் முறைகளையும் ஊக்கப்படுத்திட ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டுத் தண்டுகள், அமிழ்நீர் குட்டை, கசிவு நீர் குட்டை, செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள், மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு.
நாட்டிலேயே முதன்முறையாக கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்பு (UPI) அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன் பெறுகின்றனர்.
இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
பயிர் சாகுபடியில் அதிக உற்பத்தியும், அதிக வருமானமும் பெற, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க 2,482 கிராம ஊராட்சிகளில் “கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள்” உருவாக்க ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு.
பிற மாநில உயர் விளைச்சல் தரக்கூடிய நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள் போன்ற சான்று பெற்ற விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய நெல் ரகங்களுக்கான விதைகளை தமிழ்நாடு அரசு விநியோகிக்கும் புதிய திட்டம்.
37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
2 லட்சம் விவசாயிகள் பயனடைய 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள், 10 லட்சம் ஏக்கருக்கு, 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிட ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு.
2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
வாழை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற செடிகள் வழங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.