Amazing Tamilnadu – Tamil News Updates

வறுமை ஒழிப்பு: பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம்!

மிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், கவனம் ஈர்க்கும் திட்டங்களில் ஒன்றாக ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற திட்டமும் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தாக்கலான மூன்றாவது பட்ஜெட் இது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், வரும் 2024-25- ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் சற்று முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளையும் திட்டங்களையும் வெளியிட்டார்.

5 லட்சம் ஏழைக் குடும்பங்களின் வறுமையை அகற்ற…

அவர் தனது பட்ஜெட் உரையில், 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும், மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம்

தொடர்ந்து, குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

பழங்குடியினத்தவரை மேம்படுத்த ரூ.1,000 கோடி செலவில் தொல்குடி என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2 ஆம் கட்டப்பணிகளுக்கு ரூ.7,890 கோடி நிதி ஒதுக்கீடு. இத்திட்டம் மூலம் சுமார் 40 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.

மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

சிப்காட் பகுதியில் பணிபுரியும் பெண்களின் குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்பது உட்பட மேலும் பல அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

Exit mobile version