Amazing Tamilnadu – Tamil News Updates

வறுமை ஒழிப்பு திட்டத்தில் தமிழகத்தின் அடுத்த மைல்கல்… அடுத்த மாதம் அமலுக்கு வரும் ‘தாயுமானவர் திட்டம்’!

ந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும் வறுமை ஒழிப்பு மற்றும் சமூல நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் எப்போதுமே முன்னிலை வகித்து வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் தமிழகம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ வெளியிட்ட அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் வெறும் 2.2 சதவீதம் மக்களே வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் எனத் தெரிவித்திருந்தது.

கடைக்கோடி ஏழையையும் கரை சேர்க்கும் திட்டம்

இருப்பினும், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திடும் நோக்கில், ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற திட்டம், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கலான தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அது குறித்து அப்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியிருந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் அடுத்த மைல்கல்

அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளி பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.

அவரது இந்த அறிவிப்பு, வறுமை ஒழிப்பு திட்டத்தில் தமிழக அரசின் அடுத்த மைல்கல்லாக பார்க்கப்பட்டது.

யார் யார் பயனடைவர்?

இந்த நிலையில்தான், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘தாயுமானவர் திட்டம்’ தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, கிராம சபை மூலம் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் கண்டறியப்பட்டு, கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் உள்ளிட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version