Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள்!

மிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு தமிழ்ப்பணித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில்,

“தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்

அறிவுயரும் அறமும் ஓங்கும்” ​

மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உரிய அங்கீகாரம்

1970-ஆம் ஆண்டு முதல் ‘நீராரும் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.12.2021 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து, இப்பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டுமென்று ஆணையிட்டுத் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் 35 விருதுகள்

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, தமிழ்ச்செம்மல் விருதுகள், இலக்கண விருது, இலக்கிய விருது, தூயத் தமிழ் பற்றாளர் விருதுகள் உள்ளிட்ட 35 இனங்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு வருகிறது.

நூல்கள் நாட்டுடைமை

தமிழறிஞர்களின் படைப்புகள் எளிய முறையில் மலிவு விலையில் மக்களுக்கு கிடைத்திடும் வகையிலும், தமிழறிஞர்களின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்திட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன.

தமிழறிஞர்களுக்கான கனவு இல்லத் திட்டம்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாளான 03.06.2021 அன்று ‘கனவு இல்லத் திட்ட’த்தின் கீழ், சாகித்திய அகாதமி விருது மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் நாட்டிற்குள் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 6 அறிஞர்கட்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களை ஊக்கப்படுத்திடும் “குறள் முற்றோதல்” திட்டம்

“குறள் முற்றோதல்” திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு, தலா ரூ.15,000 வீதம் மொத்தம் 63 இலட்சத்து 46, 500 ரூபாய், குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் உணர்வை ஊக்கப்படுத்திட தமிழ்க்கூடல் திட்டம்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியின் தொன்மை – பெருமைகளை அறியவும், தமிழ் மொழி இலக்கிய இலக்கணங்களின்மீது பற்றும் ஆர்வமும் கொள்ளவும், தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் – தமிழ்ச்சான்றோர்கள் பற்றி அறிந்து – கொள்ளவும் உதவும் வகையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 6218 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளிலுள்ள தமிழ் மன்றங்கள் மூலம் – ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று ‘தமிழ்க்கூடல்‘ நடத்திட ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- என மொத்தம் ரூபாய் 5 கோடியே 59 இலட்சத்து 62,000 வழங்கப்பட்டுள்ளது.

தீராக் காதல் திருக்குறள் திட்டம்

​‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திட முதலமைச்சர் வழங்கியுள்ள 25 லட்சம் ரூபாய் நிதியுதவியில் குறளோவியம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, மாணவர்கள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு திருக்குறள் நாள்காட்டி உருவாக்கப்பட்டு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வாயிலாக ரூ.10.40 இலட்சம் செலவில், புகழ்பெற்ற 38 தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் அரிய ஒலி/ஒளிப் பொழிவுகளை இணைய தளத்தில் அனைவரும் அணுகும் வகையில் ஆவணமாக்கிட ஒலி/ஒளிப் பொழிவுகள் மின் வடிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர, தமிழ் பரப்புரைக் கழகத்தின் வாயிலாக அயல்நாடு மற்றும் வெளி மாநில தமிழர்களுக்கு தமிழ் கற்பித்தல், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜனவரி மாதம் 12 ஆம் நாள் அயலகத் தமிழர் தின விழா உள்ளிட்ட எண்ணற்ற நன்மைபயக்கும் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version