Amazing Tamilnadu – Tamil News Updates

‘தமிழ்நாட்டில் நிரப்பப்பட இருக்கும் 50,000 புதிய அரசுப் பணியிடங்கள்..!’

மிழ்நாட்டில் தனது தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 50,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “’மக்களிடம் செல் – மக்களோடு வாழ் – மக்களுக்காக வாழ்’ என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும் – தமிழினத் தலைவர் கலைஞரும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம். ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காகப் போராடுவோம், வாதாடுவோம். ஆட்சியில் இருக்கின்ற நேரத்தில், மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம், நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கியது மற்றுமொரு சிறப்பு எனக் குறிப்பிட்டார்.

50,000 புதிய அரசுப் பணியிடங்கள்

மேலும், “ திமுக ஆட்சிக்கு வந்தது முதலே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 60,567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27, 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள்

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version