Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்தில் 1,100 புதிய குழந்தை நேய வகுப்பறைகள், 5,000 தானியங்கி நீர்த்தேக்கத் தொட்டிகள், 500 நியாய விலை கடைகள்!

மிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி, தனது துறையின் மானிய கோரிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர், கிராம ஊராட்சி அலுவலகங்கள், புதிய வளாகங்கள், 5,000 தானியங்கி நீர்த்தேக்கத் தொட்டிகள், 1,100 புதிய குழந்தை நேய வகுப்பறைகள், 500 நியாய விலை கடைகள் அமைப்பது உட்பட 15 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை குறித்த விவரங்கள் இங்கே…

ரூ. 150 கோடியில் 500 கிராம ஊராட்சி அலுவலகங்கள்

ஊராட்சி மன்றங்களுக்கான கிராம ஊராட்சி அலுவலக கட்டங்கள் மற்றும் கிராம செயலகங்களில், அண்மையில் பழுதடைந்த 500 அலுவலக கட்டடங்கள், மாநில – ஒன்றிய நிதிக்குழு இணைந்து வழங்கும் ரூ. 150 கோடி நிதி மதிப்பீட்டில் புதுப்பித்து கட்டப்படும். இந்நிலையில், 2024-25 ஆண்டிற்கான 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்ட, தலா ரூ. 6 கோடி வீதம், மொத்தம் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் கூறு நிதியில் கட்டப்படும்.

புதிய ஊராட்சி அலுவலக வளாகங்கள்

2024-25 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலக வளாகம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். திருவாரூர், மதுரை, இராமநாதபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டங்களில் திட்ட இயக்குநர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் என தலா ரூ.2 கோடி வீதம், ரூ. 10 கோடி செலவில் புதிதாக கட்டப்படும்.

கள அலுவலர்களுக்கு 480 புதிய வாகனங்கள்

ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, கள அலுவலர்களுக்கு ரூ. 44 கோடி மதிப்பீட்டில் 480 புதிய வாகனங்கள் வழங்கப்படும். கசிவுநீர் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் பணிகளுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 2,500 கிராம ஊராட்சிகளில் உள்ள மேய்க்கால் நிலங்களைப் பாதுகாத்து, மேம்படுத்திடும் பொருட்டு கசிவுநீர் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகளுக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு.

5,000 நீர்த்தேக்கத் தொட்டிகள்

ரூ. 50 கோடி மதிப்பீட்டில், 5,000 மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள், இணையம் மூலம் தானியங்கி On/Off இயக்க அமைப்புகள் நிறுவப்படும். ரூ. 20 கோடி செலவில் 10 மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

கிராமப் புறங்களில் சுகாதாரமான முறையில் மலக்கழிவுகளை அகற்றும் நோக்கில், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 10 புதிய மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஊரகப் பகுதிகளில் அனைத்து சமூகத்தினரும் பயன்பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும்,2024-25 ஆம் ஆண்டில், 10 எரிவாயு தகன மேடைகள் ரூ. 25 கோடியில் அமைக்கப்படும்.

1100 புதிய குழந்தை நேய வகுப்பறைகள்

2024 – 25 ஆம் ஆண்டில் ரூ. 168 கோடி மதிப்பீட்டில், 1100 புதிய குழந்தை நேய வகுப்பறைகள் கட்டப்படும். ரூ. 60 கோடியில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் புனரமைக்கப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்புப் பணிகள் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் 500 அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் கட்டும் பணி ரூ. 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

500 சிறு பாலங்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், ஊரக சாலைகளில் குறுக்கே செல்லும் ஓடைகள் மற்றும் வடிகால்கள் மேலாக 500 சிறுபாலங்கள், ரூ. 140 கோடி செலவில் கட்டப்படும்.

500 நியாய விலை கடைகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஊரகப்பகுதிகளில் மக்கள் உணவு தானியப் பொருட்களை எளிதில் வழங்கும் பொருட்டு, முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள், ரூ. 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் மழை நீரை சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 5000 புதிய சிறு குளங்கள், ரூ. 250 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

Exit mobile version