Amazing Tamilnadu – Tamil News Updates

“கமலுக்கு ஃப்ளாஷ்பேக்குடன் சிவக்குமார் சொன்ன வாழ்த்து!”

டிகர் கமல்ஹாசன் நாளை தனது 68 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி நாளை வெளியாகிறது. இதனிடையே, கமல்ஹாசன் – மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘தக் லைஃப்’ (Thug Life) எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் ப்ரொமோ வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசனுடன் சமகாலத்தில் நடித்த நடிகர் சிவக்குமார், கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், பல்வேறு பழைய நினைவுகளைப் பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர், “நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான். அவர்கள் செய்த ‘வெரைட்டி ரோல்களை’ இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை. சிவாஜி சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு செய்து விட்டார்.

கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ திரைப்படத்தில் டூப் போடாமல் நீங்கள் சிங்கத்துடன் மோதியவர். மீண்டும் ஒரு சூரியோதயம் திரைப்படத்தில் மிரண்டு ஓடிய குதிரைக்கு அடியில் சிக்கி, கால் எலும்பு முறிய நடித்தவர் நீங்கள்.

1973-ல், ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று துவங்கி ‘தங்கத்திலே வைரம்’, ‘மேல்நாட்டு மருமகள்’- என 8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள். வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல உங்களுக்குள் இருந்த ‘பொறி’யை கண்டவன் நான். அந்தச் செடி வளர்ந்து இன்று விருட்சமாகி ‘நாயகன்’,’குணா’, ‘அன்பே சிவம்’, ‘அவ்வை சண்முகி’, ‘ஹேராம் ‘ என்று நடிப்பின் இமயத்தைத் தொட்டுள்ளது.

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார்.

அரசியலிலும், திரையிலும் சாதித்தத்தை நீங்கள் அரசியலிலும் சாதிக்க முடியும்; துணிந்து இறங்குங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version