Amazing Tamilnadu – Tamil News Updates

சொற்குவை: 2.5 ஆண்டுகளில் 11 லட்சம் புதிய தமிழ்ச் சொற்கள் பதிவேற்றம்!

மிழ்மொழியின் ஒவ்வொரு சொல்லமைப்பையும் அறிந்து சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலைப் படைப்பாளர்களும், கல்வியாளர்களும் பெற வேண்டுமெனில், தமிழின் வேர்மூலங்களை வெளிப்படுத்தும் சொற்பிறப்பியல் அகராதி அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதவை.

அந்த வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழிக்கு உருவாக்கிய பேரகராதிக்குப் பின், தமிழ்நாடு அரசே இந்தப் பொறுப்பை ஏற்றுத் தமிழ்ப் பேரகராதிக்கென ஒரு துறையைச் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்’ என்ற பெயரில் 1974-ல் உருவாக்கியது.

தமிழின் சொற்களுக்குச் சொற்பிறப்பியலுடன் கலந்த பேரகரமுதலியை உருவாக்கும்பணி, கடந்த 1974-ல் தொடங்கி 2011-ல், 38 ஆண்டுகளில் 13,270 பக்கங்களில் 31 தொகுதிகளை உருவாக்கியபோது நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அகரமுதலிகளை உருவாக்குவதுடன், கலைச்சொற்கள் உருவாக்கும் பணியையும் மேற்கொண்டுவருகிறது.

அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றக் காலத்தில் அனைத்துத் துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்கத் தேவையுள்ளது. அந்த வகையில் உலககெங்கும் பரவியுள்ள தமிழர்கள், அந்தந்த நாட்டிலும் பல துறைகளிலும் அறிஞர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இயக்ககத்தில் உருவாக்கப்பட்ட சொற்களைச் “சொல் வைப்பகத்தில்” சேகரித்து வைத்துள்ளது. அதற்குச் ‘சொற்குவை’ என்ற பெயரில் ஓர் வலைத்தளம் உருவாக்கப்பட்டு அது ‘சொற்குவை.காம்’ (www.sorkuvai.com) என்ற பெயரில் இயங்குகிறது.

பொதுவாக, ஒவ்வொரு மொழியிலும் கல்வி நிறுவனங்களில் மட்டுமே அகராதிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு அரசு அகரமுதலிக்கென்றே ஒரு துறையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் அகரமுதலித்துறையை ஓர் அரசே உருவாக்கி இயக்கி வருவது தமிழ்நாடு அரசு மட்டுமே.

அறிவியல் பெரிதும் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்திற்கேற்பக் கலைச்சொற்களை உருவாக்கும் திறன் பெற்ற மொழி மட்டுமே வாழும்; வளர்ச்சி பெறும். அவ்வாறு ஒரு மொழியின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் துணை செய்யும் முதன்மையான பணியை அகரமுதலி இயக்ககம் செயற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிய சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கலைச் சொற்களின் எண்ணிக்கை தற்போது 15 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. இந்த வலைதளத்தில் கடந்த 22.08.2021 வரை 3 லட்சத்து 91,682 சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்ற பின்னர், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த தளத்தில் உள்ள கலைச் சொற்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 8,213 ஆக அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ப்பது அதன் சொல்வளமே ஆகும். இன்றைய கல்விப்புலத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களையெல்லாம் திரட்டி அவற்றிற்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து இணையம்வழியே பொதுவெளியில் வெளியிடுவதும், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி, அவற்றுள் வந்தசொல்லே மீளவும் வராதவகையில் (deduplication) நிரல்படுத்தி, தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே ‘சொற்குவைத்’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version