மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைப் புரட்டிப்போட்டது மழை வெள்ளம். ஆனாலும், தமிழக அரசின் துரித நடவடிக்கைகளால் மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் கிடைத்துவிட்டது. புறநகரில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக நான்கைந்து நாட்களுக்குள் மற்ற அனைத்துப் பகுதிகளும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன.
அந்த வகையில், புயலால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட வந்த மத்திய நிபுணர்கள் குழு தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக வரவேற்றுப் பாராட்டி இருக்கிறது. ‘சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்’ என்றும், ‘உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது’ என்றும், ‘அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்’ என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது.
இதே கருத்தை, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தம்மைச் சந்தித்தபோது தெரிவித்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த மழை வெள்ளத்தின்போது வெள்ள நீர் அதிகம் தேங்கிய பகுதியாகவும், வெள்ள நீர் தாமதமாக வடிந்த பகுதியாகவும் பார்க்கப்பட்டது
பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் தான். எனவே எதிர்காலத்திலும் இதே நிலைமை ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நீண்டகால திட்டங்களும் அவசியமாக உள்ளன.
‘பள்ளிக்கரணையைப் பொறுத்த வரை அது சதுப்பு நிலம். அதன் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதே வெள்ள நீர் தேங்கியதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. நீர் வடிந்து தேங்காமல் இருப்பதற்கு இயற்கையால் உருவான அந்த நிலத்தை முழுவதுமாக மீட்டு அரசு நடவடிக்கை எடுக்குமா? அது போல வேளச்சேரியிலும் பல இடங்கள் சதுப்பு நிலமாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது?’ என அந்தப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, முதலமைச்சர் சொன்ன பதில் ‘மூன்றாவது மாஸ்டர் பிளான்’.
அது என்ன மூன்றாவது மாஸ்டர் பிளான் (Third Master Plan)? அந்த பேட்டியில் இது குறித்து விவரிக்கிறார் முதலமைச்சர்…
“பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும். தென்சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும். இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், வனத்துறை ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும். இந்த மூன்றாவது முழுமைத் திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும். சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்க திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் நிச்சயம் வழிவகுக்கும்.
சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எப்போதும் முனைப்புடன் உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 2021 முதல் நவம்பர் 2023 வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 475.85 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, நீர்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் 19,876 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 220.45 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
நீர்ப்பிடிப்பு மிக்க நெல்வயல்கள் குடியிருப்புகளாக மாறுவது ஒரு முக்கியமான பிரச்னையாக மாறுகிறது. அவற்றை தடுக்கவும், வரைமுறைப்படுத்தவும்
நான் ஏற்கெனவே கூறியது போல் மூன்றாவது முழுமைத் திட்டத்தை (Third Master Plan) வடிவமைக்கும்போது, இது தொடர்பான அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தகட்டமாக பல புதிய பணிகளைத் தொடங்க இருக்கிறோம். எனவே, இது முடிவுற்று விடும் பணியல்ல, தொடர்ச்சியான பணி என்பதை நாங்கள் தொடர்ந்து அறிந்துள்ளோம். மக்கள் தொகை பெருகப் பெருக, நகரம் விரிவடைய விரிவடைய எங்களது திட்டமிடுதல்களும் விரிவடையும் என உறுதி அளிக்கிறேன்.
மேலும், திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அத்திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் எங்கள் அரசு பொதுவெளியில் வெளியிடும். என்னைப் பொறுத்தவரை, இந்த அரசு ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற வகையில் செயல்படும் அரசு. இந்த இரண்டரை ஆண்டுகளில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், நாங்கள் வெகுவிரைவில் பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடுவோம்” என அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.