Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

சென்னை ஒரு சொர்க்கபுரி!

ந்தியாவில் சிறந்த நகரங்கள் என்று நாம் நினைத்தால் டெல்லியையும் மும்பையையும் கொல்கத்தாவையும் சென்னையையும்தான் சொல்வோம். இதில் பாதுகாப்பான நகரங்கள் என்று வகைப்படுத்தினால், அதில் முதல் இடத்தில் சென்னைதான் இருக்கிறது. மும்பை அடுத்த இடத்திலும் கொல்கத்தா அதற்குப் பிறகும் டெல்லி அதற்குப் பிறகும் வருகிறது.

உலக அளவில் numbeo எனும் இணையதளம் வெளியிட்டுள்ள பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், 88 புள்ளிகளைப் பெற்று அபுதாபி முதல் இடத்தில் உள்ளது.

https://www.numbeo.com/crime/rankings.jsp?title=2023-mid&displayColumn=1

சென்னை பாதுகாப்பாக இருப்பதனால்தான் வெளிநாடுகள் வெளிமாநிலங்கள் என முதலீடுகள் இங்கு வந்து குவிகின்றன. அதனால் தொழில் வளர்ச்சி அதிகரித்து, வேலை வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சென்னை வாழ்வளிக்கிறது.

சமீப காலமாக வெளி மாநிலங்கள் மற்றும் நேபாளம் போன்ற பின்தங்கிய நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சென்னைக்குப் பிழைக்கவும் படிக்கவும் வருகிறார்கள். அதற்குக் காரணம் இந்த நகரம் பாதுகாப்பானது என்று அவர்கள் உணர்வதுதான்.

தொழில் வளர்ச்சி அதிகமாக உள்ள நகரம் பொதுவாக பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த வளர்ச்சியை மக்கள் பாதுகாப்பாக அனுபவிக்க முடியும்.

பாதுகாப்பும் தொழில் மற்றும் வேலை வாய்ப்பும் இருந்தால் அந்த நகரத்தில் உள்ளவர்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கும். அந்த வகையில் சென்னை 65.15 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தொழில் வளர்ச்சி உள்ள நகரங்களில் உள்ளூர் மக்கள் தொகையைத் தாண்டி வெளியூரில் இருந்து பிழைக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து குற்றச்சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதையும் கட்டுப்படுத்துவது அவசியம்.

உதாரணமாக மும்பை ஒரு தொழில் வளர்ச்சி உள்ள நகரம். அந்த நகரத்தில் பாதுகாப்பு 55.06 புள்ளிகளில் உள்ளது. இது சென்னையை விடக் கீழே. சென்னை அந்தப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் நிலையில் மும்பை பத்தாவது இடத்தில் உள்ளது.

இதனால் அந்த நகரத்தில் வசிப்பவர்களின் வாங்கும் சக்தியும் 52.3 என்ற நிலையில் சென்னையை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை ஒரு சொர்க்கபுரியாகவும் கனவு நகரமாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம்.

Exit mobile version