Amazing Tamilnadu – Tamil News Updates

சம்மர் ஹாலிடேக்கு ஒரு ஜாலி ட்ரிப்… மீண்டும் தொடங்கும் நாகை – இலங்கை கப்பல் சேவை!

கோடை விடுமுறையை குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் சேர்ந்து கொண்டாடுகிறார்களோ என்று சொல்லத்தக்க வகையில், சுற்றுலா தலங்களில் குடும்பங்களின் கூட்டம் அலை மோதுகிறது. அதிலும் கொளுத்துகிற வெயிலின் பிடியிலிருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகின்றன.

இந்த கூட்டம் எந்த அளவுக்கு குவிகிறது என்பதற்கான சான்றுதான் மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ – பாஸ் கட்டாயம் என்ற அரசின் உத்தரவு. சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பாதிப்பு என்ற கண்ணோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மே 13 முதல் நாகை – இலங்கை கப்பல் சேவை

இந்த கட்டுப்பாடு காரணமாக ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்ல திட்டமிட்டவர்கள், டூர் செல்ல மாற்று இடங்களை யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படி யோசிப்பவர்கள், தங்களது சுற்றுலா லிஸ்ட்டில் இலங்கையையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லத்தக்க வகையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை , வருகிற 13 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவின்போது…

முன்னதாக இந்த கப்பல் போக்குவரத்து, கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா-இலங்கை இடையே சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதால், அது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், மோசமான வானிலை உள்ளிட்ட சில காரணங்களால் நாகை – இலங்கை இடையேயான அந்த கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

பயண நேரம்

இந்த நிலையில், தற்போது இந்த கப்பல் சேவை மீண்டும் வருகிற 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருப்பதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த கப்பல் போக்குவரத்து சேவைக்கு ‘சிரியா பாணி’ என்ற கப்பல் இயக்கப்பட்ட நிலையில், தற்போது ‘சிவகங்கை’ என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் இந்த பயணிகள் கப்பல், சுமார் மூன்றரை மணி நேரத்தில் காங்கேசன் துறைமுகத்தை சென்றடையும். ‘இண்ட்ஸ்ரீ கப்பல் சேவை’ என்ற தனியார் நிறுவனம் மூலம் இந்த கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கட்டணம்

டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டி தவிர்த்து ரூ. 5,000 முதல் 7,000 வரை இருக்கும். இந்த பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த கப்பல் தினமும் காலை 7 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு, பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தை அடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகபட்டினம் வந்தடையும்.

காங்கேசன் துறைமுகம்

வசதிகள் என்னென்ன?

இதில் பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோக குளுகுளு ஏ.சி. வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சிப் பெட்டிகள் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆபத்துக் காலங்களில் உயிர் காக்கும்
மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் அனைத்தும் உள்ளன.

இலங்கை

விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோருக்கு விசா தேவையில்லை, பாஸ்போர்ட் இருந்தாலே போதும் என்பதால், இந்த கோடை விடுமுறையை இலங்கை சென்றும் கொண்டாடிவிட்டு வரலாம்.

Exit mobile version