Amazing Tamilnadu – Tamil News Updates

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: குற்றச்சாட்டுகளுக்கு இதுதான் பின்னணியா?

புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முன்வைத்து, அது திறக்கப்பட்ட நாளிலிருந்தே சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன. முதலில், “கோயம்பேடு போன்று அருகில் இல்லை’ எனக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கிளம்பாக்கத்துக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கும் போதுமான இணைப்பு பேருந்துகள் விடப்பட்டவுடன், அந்த சர்ச்சை ஓய்ந்தது.

அடம் பிடித்த ஆம்னி பேருந்து நிறுவனங்கள்

அடுத்ததாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தங்களால் கிளாம்பாக்கம் சென்று பயணிகளை ஏற்ற முடியாது எனக் கூறி நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து, “ஆம்னி பேருந்துகளுக்குப் பயணிகளை ஏற்றுவதால் கிடைக்கும் லாபம் ஒருபுறம் என்றால், மறுபுறம் பார்சல் வருமானம் தனி. கோயம்பேடு என்றால், பார்சல் புக்கிங் அதிகமாக கிடைக்கும்; கிளாம்பாக்கம் என்றால் பார்சல் அனுப்ப வருபவர்கள் யோசிப்பார்கள். மேலும் கிளாம்பாக்கத்தில், கோயம்பேட்டைப் போன்று அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் ஆம்னி பேருந்துகளுக்கும் பேருந்து நிலையங்கள் தனித்தனியாக இல்லாமல், அருகருகே உள்ளது.

இதனால், கிளாம்பாக்கம் வந்து ஊருக்குச் செல்பவர்கள் கட்டணத்தைக் கருத்தில்கொண்டு அரசுப் பேருந்துகளில் செல்லவே முன்னுரிமை கொடுப்பார்கள். இதனால், ஆம்னி பேருந்துகளின் வருமானம் பாதிக்கப்படும். அதனால்தான், அவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என அது குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமல்லாமல், ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசை பாராட்டியதோடு, “எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது” எனவும் குறிப்பிட்டிருந்தது.

நள்ளிரவில் நடந்த போராட்டமும் பின்னணியும்

இந்த நிலையில்தான் கடந்த வார இறுதியில், ‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல நள்ளிரவில் போதிய பேருந்துகள் இல்லை’ என பயணிகள் போராட்டம் நடத்தியதாக பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 80% சதவீதம் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. 133 பேருந்துகள் திருச்சிக்கு வழக்கமாக இயக்கப்படும். ஆனால் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் 70 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிட்டு, 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது. ஆனாலும், பேருந்து இல்லை எனப் போராட்டம் நடந்ததாக கிடைத்த தகவலால், அமைச்சர் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு நேரில் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்பி வருவதாக அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார். மேலும் , ஆம்னி பேருந்துகளின் ‘லாபி’ யும் இதில் இணைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் குறைவாக இருக்கிறது என்னும் வதந்தியை பரப்பினால் மீண்டும் ஆம்னி பேருந்துகளுக்கு மக்கள் வருவார்கள் என நினைக்கிறார்கள். இரண்டு நாட்களாக அங்கு நடைபெற்ற போராட்டம் உள்நோக்கத்தோடு நடைபெறுகிறது எனத் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல வரவிருக்கும் தேர்தல் பிரசார உத்திகளில் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த எதிர்க்கட்சி ஒன்றின் அஜெண்டாவில் ‘கிளாம்பாக்கமும்’ இடம் பெற்றிருப்பது அக்கட்சியினருக்கு பகிரப்படும் சுற்றறிக்கை மூலம் தெரியவருகிறது” என இப்போராட்ட பின்னணி குறித்த காரணங்கள் அம்பலமாகி உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

‘ரயில் நிலையம் மட்டும் எல்லோருக்கும் பக்கமா?’

இந்த நிலையில், “12 மணி ஆகிவிட்டாலே வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். அதிகாலை 4 மணியிலிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டிலும் இந்த நிலைதான் இருந்தது. ஆனால், கடந்த வார இறுதியில் மட்டும் எப்படி திடீரென நள்ளிரவில் பேருந்து இல்லை எனப் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் பின்னணியில் நிச்சயம் அரசியல் கட்சியின் தூண்டுதல் இருக்க வாய்ப்புண்டு. இவர்களில் யாராவது, எப்பொழுதாவது ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நேரம் தாண்டி, ரயில் சேவை இல்லை எனப் போராட்டம் நடத்தி உள்ளனரா..?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், எழும்பூர் ரயில் நிலையமும் தான் சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ளவர்களுக்கான தொலைதூர ஊர்களுக்குச் செல்லக்கூடிய ரயில் நிலையங்கள். இந்த ரயில் நிலையங்களுக்கு சென்னையின் பல இடங்களிலிருந்து 20, 30 கி.மீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் காலங்காலமாக வந்து, ரயிலேறி சென்றுகொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் ‘ரயில் நிலையம் ஏன் இவ்வளவு தூரத்தில் இருக்கிறது..?’ என்று எப்போதாவது எதிர்ப்பு தெரிவித்துள்ளனரா..?

மேலும், சமீப ஆண்டுகளாக வடக்கிலிருந்து தமிழ்நாடு வரும் மற்றும் இங்கிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உடன் டிக்கெட்டில் வருபவர்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர். இந்த பிரச்னை தீவிரமாக எழுப்பப்படாதது ஏன்? இது குறித்து ரயில்வே துறையோ அல்லது ஒன்றிய அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறித்து, கிளாம்பாக்கத்துக்காக குற்றம் சாட்டுபவர்கள் ஏன் எதுவும் கேள்வி எழுப்புவதில்லை ” என மேலும் வரிசையாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், “எந்த ஒரு புதிய பேருந்து நிலையமும் புதிதாக தொடங்கப்படும்போது சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். சென்னை பாரிமுனையிலிருந்து கோயம்பேட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்றியபோதும், இதே போன்றுதான் சிரமமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் சென்னை அடைந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுத்தது கோயம்பேடு பேருந்து நிலையம்தான். இதோ சென்னை மாநகரம், அதன் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதை உணர்த்தவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.

மெட்ரோ ரயில் வந்தவுடன் கோயம்பேடு எப்படி பயணிக்க எளிதானதோ, அதேபோன்றுதான் இன்னும் சில மாதங்களில் கிளாம்பாக்கத்துக்கும் மெட்ரோ ரயில் வந்த உடன் பயணம் இன்னமும் எளிதாகிவிடும். மேலும், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செல்வதால், கோயம்பேட்டில் இருந்து செல்லும் மொத்த பயண நேரத்தில், 1 மணி நேரம் குறையும்” என்பதே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆதரிப்பவர்களின் வாதமாக உள்ளது.

ஆக மொத்தத்தில் ‘கிளாம்பாக்கம்’ நாளைய கோயம்பேடு ஆகப்போவது நிச்சயம்!

Exit mobile version