Amazing Tamilnadu – Tamil News Updates

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஏன் கூடாது?- ஆபத்துகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் 2 தனித் தீர்மானங்களைக் கொண்டு வந்து, அதனால் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்பதை வரிசையாக பட்டியலிட்டு விளக்கினார்.

தமிழ்நாடு சட்டசபையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டசபையில் இன்று கேள்வி நேரத்துக்குப் பின்னர், மேற்கூறிய 2 தனித் தீர்மானங்களைக் கொண்டு வந்தார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ : ஆபத்துகள் என்ன?

அப்போது பேசிய அவர், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது எத்தகைய ஆபத்தானது என்பது குறித்த பல விஷயங்களைப் பட்டியலிட்டு விளக்கினார். இது குறித்து அவர் பேசுகையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ‘சுதந்திரமான, நேர்மையான’ தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும், அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும்- இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.அனைத்து மாநிலங்களும் ஆட்சி அமைந்து – ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால் – அனைத்து மாநிலங்களையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து – தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன் வந்து பதவி விலகுவார்களா? இதை விட காமெடிக் கொள்கை இருக்க முடியுமா? நாடாளுமன்ற சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல -உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? நாடாளுமன்றத் தேர்தலையே கூட -ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்துவதற்கு தயாராக இல்லாத சூழல் தான் இப்போது இருக்கிறது? இந்த நிலையில்நாடாளுமன்றத் தொகுதிக்கும் 30 மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா?” என வினவினார்.

அத்துடன், “நகராட்சிகளும், பஞ்சாயத்துகளுக்கும் சட்டமன்றம், பாராளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. உள்ளாட்சித் தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப் போவதாகச் சொல்வது மாநில உரிமைகளைப் பறிப்பது ஆகும். எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version