Amazing Tamilnadu – Tamil News Updates

எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் நம்பர் 1 தமிழ்நாடு!

லெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2023 ஏப்ரலில் இருந்து அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு ஏற்றுமதி செய்த எலெக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி மதிப்பு 4.8 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது நம்மூர் பணத்திற்கு 40 ஆயிரம் கோடிக்கு மேல். அதே காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த எலெக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு 2.5 பில்லியன் டாலர்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடிக்கு மேல். இந்தக் கணக்கின் படி, இந்தியாவிலேயே எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் இருக்கிறது.

எலெக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றமதியில், தமிழ்நாடு தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சியில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான எலெக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு 500 மில்லியன் டாலர். நம்மூர் பணத்திற்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடிக்கு மேல் வரும். அதுவே அடுத்த மாதம் 817 மில்லியனாக அதாவது நமது பணத்திற்கு 6 ஆயிரத்து 814 கோடியாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 60 சதவீதம் உயர்வு.

இந்த வேகத்தில் போனால், 2024ம் நிதியாண்டில் தமிழ்நாடு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 8 பில்லியன் டாலர்களை எட்டிவிடும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார். ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், ஃப்ளெக்ஸ் போன்ற மிக முக்கியமான எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

இந்தியாவின் மொத்த எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் 31 சதவீதத்தை தன்வசம் வைத்திருக்கும் தமிழ்நாடு, எலெக்ட்ரானிக் பொருள் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் உ.பி., 16% எலெக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. கர்நாடகா 14% ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version