Amazing Tamilnadu – Tamil News Updates

உலக முதலீட்டாளர் மாநாட்டில் நீங்களும் பங்கேற்க விரும்புகிறீர்களா..?

‘உலக முதலீட்டாளர் மாநாடு’ சென்னையில், வருகிற 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டையொட்டி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இவை:

1. இந்த மாநாட்டிற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, கடந்த மே மாதத்திலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஒன்பது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதே போல துபாய்க்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

2.ஏற்கனவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் ரூ. 3 லட்சம் கோடி வந்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பல்வேறு நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ளன. இந்த முதலீட்டாளர் மாநாட்டில், மேலும் பல லட்சம் கோடிகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

    3. தமிழ்நாடு அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் திட்டத்தின் கீழ், அந்தத் துறை தொடர்பாக சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் ஒரு லட்சத்து 50,000 பேருக்கு வேலை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    4. ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமெட்டிவ் இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 5, 300 கோடி முதலீட்டுக்கான உத்தரவாதத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. கார் உற்பத்தி நிறுவனமான இது, ஏற்கனவே ஒரகடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய வகை கார்களை உற்பத்தி செய்ய, புதிய முதலீடுக்கான உத்தரவாதம் அளித்துள்ள இந்நிறுவனம், 2,000 வேலை வாய்ப்புக்களுக்கும் உத்தரவாதம் அளித்துள்ளது.

    5. தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் (ஹான் ஹாய் டெக்னாலஜி குரூப்) நிறுவனம், புதிய மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்க 1,600 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளது.

    இதுவரையில் 2,97,196 லட்சம் கோடிகளுக்கு 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வரும் போது மாநிலத்தில் 4 லட்சத்து 15 ஆயிரத்து, 282 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    6. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், ராணிப்பேட்டையில் 7 , 614 கோடியில் இலகு ரக எலெக்ட்ரிக் மோட்டார் வாகன உற்பத்தியை தொடங்க உத்தரவாதம் அளித்துள்ளது.

    7. சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்கும் அதே சமயத்தில், நமது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் தொழில்களை உலக முதலீட்டாளர் மாநாட்டில் காட்சிப்படுத்தவும் தயாராக இருக்கிறார்கள். உதாரணமாக, ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ என்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த யூடிப் சேனல், உலக முதலீட்டாளார் மாநாட்டில் பங்கேற்கிறது. விதவிதமான சமையலில், யூடியூப் சேனலில் 1000 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த அந்த சேனல் உரிமையாளர்கள், தங்களின் அனுபவத்தை மாநாட்டில் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

    8. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் தமிழ்நாடு 9 சதவீத பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 14.22 சதவீதம். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 9 சதவீத பங்கு தமிழ்நாட்டினுடையது. இது போன்ற சாதக விஷயங்கள், உலக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கிறது.

    9. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. முதலீட்டாளர்களுக்கு இறுக்கமற்ற தன்மை, வர்த்தகத்திற்கு சாதகமான மாநில அரசின் அணுகுமுறை, இங்கு கிடைக்கும் அளவு கடந்த இயற்கை வளங்கள், உயர்தரமான திறன் வாய்ந்த பணியாளர்கள், போக்குவரத்து உள்ளிட்ட சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை உலக முதலீட்டாளர்களின் சொர்க்கமாக தமிழ்நாட்டை உருவாக்கி வைத்திருக்கிறது.

    கடைசியாக ஒன்று இவ்வளவு சிறப்பு வாய்ந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் நீங்களும் பங்கேற்க விரும்புகிறீர்களா..?

    10. மாணவர், புத்ததாக்கத் தொழில் முனைவோர், கல்வியாளர் என்று நீங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். பங்கேற்கலாம். பின்வரும் இணையதளத்தில் சென்று, உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள். கட்டணம் எதுவுமில்லை. பொருளாதாரத்தில் உச்சத்தை அடையும் தமிழ்நாட்டை அருகில் இருந்து காண உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு… https://tngim2024.com/registration

    Exit mobile version