விருதுநகர் மாவட்டம், வெம்பகோட்டை வடகரை வைப்பாற்று பகுதியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியது. கடந்த 8 மாதங்களாக நடைபெற்ற இந்த அகழ்வாராய்ச்சியில், சுமார் 5,000 தொன்மையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தங்க தாழி, யானை தந்தத்தால் ஆன பகடை காய், ஆண் உருவச் சுடுமண் பொம்மை, செங்கற்களால் ஆன சுவர், சங்கு வளையல்கள், பச்சை மற்றும் வெள்ளை நிற பாசிமணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சி முடிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “கற்கால மனிதன் வாழத்தொடங்கிய இடம் திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம் எனத் தெரியவந்துள்ளது. கற்காலம் முதல் மனித இனம் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவது பட்டறை பெரும்புதூர். விருதுநகரில் இரண்டாம்கட்ட அகழ்வாராய்ச்சி நிறைவுபெற்றுள்ளது. விரைவில் அடுத்தகட்ட அகழ்வாய்வு தொடங்கும். கீழடியில் அமைந்துள்ள உலக தரத்திலான அருங்காட்சியகம் போல் , விருதுநகரில் 5 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தாமிரபரணி ஆறு, ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை போன்ற பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. வெம்பக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 5,000 தொன்மையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வைப்பாரில் உள்ள நாகரிகம் கீழடியில் உள்ள நாகரிகத்திற்கு இணையாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.